இட ஒதுக்கீடுக்கு ஆபத்து! என்ன செய்யப்போகிறது இந்தியா?

இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாநிலங்களை கட்டாயப்படுத்த முடியாது என்று அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த முடியாது என்று அறிவித்துள்ளது.


உத்தரகாண்ட் அரசாங்கத்தின் பொதுப்பணித் துறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் இட ஒதுக்கீடு அளிக்காமல் செய்யப்பட்ட நியமனங்கள் செல்லாது என்று உயர் நீதிமன்றம் கூறியது. 

இதை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில்தான், “பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவதற்கு தனிநபருக்கு அடிப்படை உரிமையும் இல்லை. இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, “பொது பதவிகளில் நியமனம் செய்ய இட ஒதுக்கீடு வழங்குமாறு மாநிலத்தை வழிநடத்த முடியாது’’ என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம்தான் அனைத்து கட்சிகளையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக கட்டிக் காப்பாற்றிவரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காற்றில் பறக்கக்கூடாது என்று போராட்டத்தை தொடங்க உள்ளது.

ஆனால், இந்த இட ஒதுக்கீட்டு ஆணையை பா.ஜ.க. ஆதரித்துள்ளது. அதே நேரம் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று, பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.