ஜெய் ஸ்ரீராம் சொல்லு! பாரத் மாதா கி ஜே சொல்லு! முஸ்லீம்களை வதைக்கும் வலதுசாரிகள்!

வடகிழக்கு மாநிலமான அசாமில் சில இஸ்லாமிய பொதுமக்களை "ஜெய் ஸ்ரீ ராம்", "பாரத் மாதா கி ஜே" என்று முழக்கமிட வற்புறுத்தியதற்காக வலதுசாரி மாணவ அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றானது அசாம். இங்கு பர்பேட்டா என்ற மாவட்டத்தில் நேற்று இரவு சில இஸ்லாமியர்கள் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். திடீரென்று ஒரு கும்பல் அவர்களின் ஆட்டோவை வழிமறித்தது. அவர்களைக் கீழே இறங்குமாறு கூறி, "வந்தே மாதரம்","பாரத் மாதா கி ஜே","பாகிஸ்தான் முர்தாபாத்" ஆகிய முழக்கங்களை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் சிறிது நேரம் பர்பேட்டா நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கும்பலை சேர்ந்தவர்களே இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு பர்பேட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வீடியோ காட்சிகளின் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் வலதுசாரி மாணவ அமைப்பினர் என்பதனை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.