இந்த அறிவிப்பு பத்தாது - எடப்பாடிக்கு வைகோ செக் !

காவிரிப் பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உண்மையாகவே அக்கறையுடன் இருந்தால், பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கு 2017 ஜூலை 19-இல் வெளியிட்ட அரசின் குறிப்பாணையைத் (எண் 29) திரும்பப்பெற வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.


இன்று காலையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை 2011இல் அது வெளியிடப்பட்டபோது, முதன்முதலில் எதிர்த்தவர் மறைந்த இயற்கை ஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்பதை நினைவுகூர்ந்துள்ள வைகோ, அவரைத் தொடர்ந்து மீத்தேன் திட்டத்தை திரும்பப்பெறக் கோரி முதன்முதலில் தானே ம.தி.மு.க. சார்பில் அறிக்கை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்ச்சியாக, 2012 ஏப்ரல் 30 ஆம் தேதி ஒகேனேக்கலில் ம.தி.மு.க. சார்பில் விவசாயிகளைத் திரட்டி நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம், 2014 நவம்பர் 22 இல் டெல்டா பகுதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்புவிடுத்த மறியல்போராட்டத்தில், தான், தஞ்சையில் இரயில்மமறியலுக்குத் தலைமைவகித்தது, 2014 டிசம்பர் 14 தொடங்கி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு மாத காலம் விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொண்டது ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ள வைகோ, 

மீத்தேன் திட்டத்தில் இருந்து சோழ மண்டலத்தைக் காப்பாற்றவும் 2015 ஜனவரி 20 ஆம் நாள், தஞ்சையில் தன்னுடைய தலைமையில் காவிரி பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது என்றும் 2015 பிப்ரவரி 18 ஆம் தேதி தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கடலூர் ஆகிய 14 மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டத்தில் தான்,

தஞ்சையில் பங்கேற்றதாகவும் இதே கோரிக்கையை முன்வைத்து, சென்னையில் மத்திய அரசின் சுங்க அலுவலகம் முற்றுகைப் போராட்டம், 2015 மார்ச் 11 ஆம் நாள் தன்னுடைய தலைமையில் நடந்தது என்றும் காவிரிப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 2015 ஏப்ரல் 7ஆம் தேதி தஞ்சையில் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் தானும் பங்கேற்றதாகவும் நினைவுகூர்ந்துள்ளார். 

தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்திலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு திட்டங்களால் ஏற்படும் சூழலியல் கேடுகள் குறித்து, 2017 ஆம் ஆண்டில் இருந்து வழக்கில் வாதாடி வருவதையும், 2019 டிசம்பர் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தான் கேள்வி எழுப்பியதையும் கடந்த 5ஆம் நாள், குடியரசுத் தலைவர் உரை மீதான உரையாடலின்போது மீத்தேன் திட்டம் குறித்து குறிப்பிட்டதையும் வைகோ தன்னுடைய அறிக்கையில் பதிவுசெய்துள்ளார். 

அறிக்கையின் இறுதியாக, “ காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலம் ஆக்குவோம் என அறிவித்துள்ள முதல்வர்தான் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று இருந்தபோது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டு இருக்கிறார்.

எடப்பாடி அரசு 2017 ஜூலை 19 ஆம் தேதி வெளியிட்ட குறிப்பு ஆணை (Notification)யில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals & Petrochemical Investment Region -PCPIRs) அமைப்பதற்கு 45 கிராமங்களில் 22938 ஹெக்டேர் அதாவது சுமார் 57ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் புரந்தன்ட் சாட்டர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பிப்ரவரி 7 ஆம் தேதி சந்தித்து, கடலூர் மாவட்டத்தில் அமைய உள்ள பெட்ரோலிய ரசாயன மண்டலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்குக் கோரி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், மத்திய பா.ஜக. அரசு தூக்கி எறிந்தது போல முதல்வரின் இந்த அறிவிப்பும் ஆகிவிடக் கூடாது. எனவே, தமிழகச் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுவது மட்டும் அன்றி, அதை செயல்படுத்திக் காட்டுவதிலும் முனைப்பாக இருக்க வேண்டும்.” என்று வைகோ முக்கியமாக கவனப்படுத்தியுள்ளார்.