கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்களை வழங்க முடியாது..! அரசு எடுத்த முடிவு..! அதிர்ந்த பொதுமக்கள்!

கொரோனா வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குடும்பத்தினரிடம் வழங்கப்படமாட்டாது என்று இலங்கை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 29,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 6,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் இதுவரை இந்த நோய் 113 பேரை தாக்கியுள்ளது. மேலும் நேற்று முதன் முதலில் இந்த நோய் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்த நபர் 60 வயது முதியவர் என்றும், அவர் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் ஏற்கனவே இரத்தக்கொதிப்பு சிறுநீரக கோளாறுகள் ஆகியவற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் இலங்கை சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குடும்பத்தினரிடம் வழங்கப்படமாட்டாது என்று சுகாதார சேவைகள் இயக்குநரான பபா பலிஹவடன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "வைரஸ் தாக்குதலினால் இறப்பவர்களின் சடலங்கள் குடும்பத்தினரிடம் வழங்கப்பட மாட்டாது. தற்போதுள்ள நடைமுறைப்படி அரசாங்கமே விதிமுறைகளுக்கு ஏற்ப இறுதி சடங்குகளை செய்து முடிக்கும்" என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியானது அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.