இனி ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படாது! ரிசர்வ் வங்கி திடீர் முடிவு! காரணம் இது தான்..!

இந்திய நாட்டின் உயரிய மதிப்பான 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை தற்போது ரிசர்வ் வங்கி நிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனை அடுத்து ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக ஏடிஎம் வாசலில் மிகப்பெரிய வரிசைகளில் பொதுமக்கள் நின்றதை நம்மால் மறக்க இயலாது.

500, 1000 ரூபாய் நோட்டுகளை அதிரடியாக நீக்கம் செய்தபின் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சற்று குறைவாக இருக்கிறது. ஆகையால் ஏடிஎம் இயந்திரத்தில் கூட நம்மால் 2,000 தாள்களை பார்க்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 

ஏன் திடீரென்று இந்த இந்த சூழ்நிலை உருவானது என்று பலரிடமும் கேள்வி எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டு அதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில் ரிசர்வ் வங்கி , கடந்த 2016 - 2017 மற்றும் 2017 -2018 ஆம் நிதியாண்டுகளில் 2000 ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டதாகவும், ஆனால் தற்போது செயல்பட்டு வரும் 2019 - 2020ம் நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட அச்சிடப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

இதனை பற்றி அறிந்த பொருளாதார நிபுணர் நிதின் தேசாய் , புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஒரேடியாக நிறுத்துவதற்கு பதிலாக படிப்படியாக அதனுடைய புழக்கத்தை குறைத்தால் பொதுமக்கள் சிரமம் இன்றி வாழலாம் என்று கூறியுள்ளார்.