ரெம்டெசிவிர்..! கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்க நிறுவனம்..!

அமெரிக்காவை சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கொரோனாவை கட்டுப்படுத்தும் ரெம்டெசிவிர் என்ற மருந்தை கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.


உலகை அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றானது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி தன்னுடைய கோர தாண்டவத்தை பாரபட்சமில்லாமல் காட்டிவிடுகிறது. இதுவரை இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சரியான மருந்து ஏதும் இல்லாததால் எக்கச்சக்கமான மக்கள் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் அமெரிக்காவை சேர்ந்த கிலியட் என்ற மருந்து நிறுவனம் ரெம்டெசிவிர் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் கொரோனா வைரசை இந்த மருந்து கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளித்து பரிசோதனை மேற்கொண்டனர். இந்த மருந்து கொடுத்து ஐந்து நாட்களில் அவர்களது உடலில் கணிசமான முன்னேற்றம் தெரியவந்தது. 

இந்த மருந்தை எடுத்துக்கொண்ட பாதிப்பேர் இரண்டு வாரங்களில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது இந்த மருந்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் இறுதிகட்ட சோதனையில் உள்ளனர் . அதுமட்டுமில்லாமல் தேசிய அலர்ஜி மற்றும் தொற்றுநோய் நிறுவனம் இம்மருந்தை பரிசோதித்து அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது. மற்ற நிறுவனங்களின் மருந்துகளை விட கிலியட் நிறுவனம் தயாரித்த இந்த மருந்தானது 31% நல்ல பலனை அளித்து உள்ளதாக கூறியுள்ளனர். அதாவது மற்ற மருந்துகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் 15 நாட்களில் பலன் கிடைக்க ஆரம்பித்தது . ஆனால் கிலியட் நிறுவனம் தயாரித்த ரெம்டெசிவிர் மருந்தானது 11 நாட்களில் நோயாளிகளை குணமடைய செய்கிறது. 

இதன் மூலம் நோயாளிகளின் குணமடையும் காலம் வெகுவாக குறைகிறது. இந்த மருந்தானது கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியும் என நிரூபித்து காட்டியுள்ளது. இதுவரை இந்த மருந்தினை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் 68 இடங்களில் 1,063 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒருவேளை இந்த மருந்தினை நோயாளிகள் உட்கொள்ளும் பொழுது எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதை நிரூபித்துக் காட்டும் பட்சத்தில் மிக விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.