இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா – அறிவியல் விளக்கம்!

இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்த விதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.


மின் சக்தியை இயக்கக்கூடிய பொருட்களைத்தான் நாம் பூஜையறையில் பயன்படுத்துகிறோம். மாவிலை, வேப்பிலை, துளசி, எலுமிச்சம் பழம் ஆகியவற்றிக்கு இந்த ஆற்றல் அதிகம். பிராணவாயு நம் இரத்தத்தில் ஹீமோகுளோபினை பண்பாக கலப்பதற்கு இவைகள் உதவுகின்றன. இந்த சக்தி கோயில் கருவறையில் அதிகமாக உள்ளது. மலைகள், கடற்கரை அருகிலுள்ள ஆலயங்களில் இந்த சத்தி அதிகமாக உள்ளது. எனவேதான் மலைமீதும், கடற்கரை அருகிலும் ஆலயங்களை அமைத்துள்ளனர்.

கோயில் மணியிலிருந்து வரும் ஓசை அணுமண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அலைவரிசையை தோற்றுவிக்கிறது. நம் உடலும், ஆன்மாவும் அந்த அலைவரிசையினால் தூண்டப்பட்டு நம் மூளை, இருதயம், செவிப்பறை ஆகியவற்றிற்கு ஊட்டம் அளிக்கிறது. எரியும் கற்பூரத்திலிருந்து வரும் ஒளி நம் கண்ணிலுள்ள நரம்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது.

அனைத்து சூழ்நிலைகளிலும் நமது மனதை ஒருமுகப்படுத்த முடியாது. ஆனால் இறைவன் குடி கொண்டிருக்கும் ஆலயத்துக்குள் நுழையும் போதே மனம் ஒருவித கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது. ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசை, அங்கு ஓதப்படும் மந்திரங்கள், தீபங்கள் நம் மனதில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துகிறது.

சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும்.

அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது மந்திர யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளதென்றும் எனவே ஆலயங்களிலே சென்று வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து போய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் ஒரு பசுவின் உடல் முழுவதும் இரத்தம் வியாபித்திருந்தாலும், அந்தப்பசுவின் மடியில்(முலையில்) தான் இரத்ததை பாலாக மாற்றித் தரும் சுரப்புகள் உள்ளன. அதேபோல இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும்; ஆலயத்தில் அமையப் பெற்றுள்ள மந்திர, யந்திர, பூசைகளின் சக்திகளினாலே சுரக்கப் பெறும் இறைவனின் கருணையை சுலபமாக பெற முடிகின்றது.

எனவேதான் இறைவனை ஞானியர்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் சென்று வழிபடுவது சாலச் சிறந்தது.