காவடி எடுப்பது இதற்காகத்தான்..! அகஸ்தியரின் அருள் பெற்ற வழிபாடு

தமிழ் கடவுளான முருகனுக்கு செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான்.


அகஸ்திய முனிவர் தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்தமலையில் உள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் கம்பில் கட்டி தன் தோளின் இருபுறமும் காவடிபோல தொங்க எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் பழனியில் நிலை பெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

அதன்படி பழனி அருகே வந்து கொண்டிருந்த இடும்பன் காவடிகளை வைத்து விட்டு சற்று ஓய்வு எடுத்தான். ஓய்வெடுத்து விட்டு புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதை கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாட, கோபம் அடைந்த இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம்போல் கீழே சரிந்து விழுந்தான். இதை கண்ட அகஸ்தியர் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன்போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள்பாலிப்பதாக வாக்களித்தார். அப்போது முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது.

காவடிகளில் பல வகைகள் இருக்கின்றன். குறிப்பிட்டுக் கூறும்படி இருபது வகையான காவடிகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. வேண்டுதலின் பொருட்டு எடுக்கப்படும் ஒவ்வொரு வகை காவடிக்கும் ஒவ்வொரு வகை பலன் என்று கூறப்படுகிறது காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது. எந்த காவடி எடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை காணலாம்

தங்கக் காவடி - நீடித்த புகழ் கிடைக்கும் 

வெள்ளிக் காவடி - நல்ல உடல் ஆரோக்கியம் உண்டாகும்

பால் காவடி - செல்வச் செழிப்பு ஏற்படும்

சந்தனக் காவடி - வியாதிகள் நீங்கும்

பன்னீர்க் காவடி - மனநலக் குறைபாடுகள் விலகும்

சர்க்கரைக் காவடி - சந்தான பாக்கியம் கிடைக்கும்

அன்னக் காவடி - வறுமை நீங்கும்

இளநீர் காவடி - சரும நோய்கள் விலகும்

அலங்காரக் காவடி - திருமண தடை நீங்கும்.

புஷ்ப காவடி - நினைத்தது நடக்கும்

கற்பூரக் காவடி - வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

சர்ப்பக் காவடி - விரும்பிய குழந்தை வரம் கிடைக்கும்.

மஞ்சள் காவடி - செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்

சேவல் காவடி - எதிரிகள் தொல்லை ஒழியும்

அக்னிக் காவடி - திருஷ்டி தோஷம் மற்றும் பில்லி சூனியம் செய்வினை அகலும்.

தேர்க் காவடி - உயிர் பிழைக்க வைத்ததற்கு முருகனுக்கு நன்றி தெரிவிக்க எடுக்கும் காவடி

மச்சக் காவடி - நீதிமன்ற விவகாரங்களில் இருந்து விடுபடலாம். நேர்மையான் தீர்ப்பு கிடைக்கும்

மயில் காவடி - இல்லத்தில் இன்பம் நிறையும், குடும்பப் பிரச்சனைகள் தீரும்.

பழக் காவடி - செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.

வேல் காவடி - எதிரிகள் நம்மை பார்த்து அஞ்சிடுவர்

கடவுள் மீது முழு நம்பிக்க விரதமிருந்து காவடி எடுத்தால் வேலவன் அருளால் வேண்டியதைப் பெற்று இன்புறலாம்.