ஒளி வடியில் இறைவனை ஆராதிக்கும் தீப ஆராதனை ரகசியம்!

இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது.


இறைவனே தீப வடிவில் விளங்குகிறார். நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்பெறுகிறது. கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும். அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு.

கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்பெறுகிறது.

ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே தீபாராதனை என வழங்கப்பெறுகிறது. தீபாராதனை என்பது வெறும் சடங்காக மட்டுமின்றி, உலகின் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் காட்டும் தத்துவ விளக்கமாகவும் அமைந்துள்ளது. கோவில்களில் நடைபெறும் தீபாராதனையின் வரிசையையும் அதன் தத்துவத்தையும் ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

கோவில்களில் அலங்கரிக்கப்பட்ட மூர்த்தங்களுக்கு முன்பு திரையிடப்பட்டிருக்கிறது.திரைக்கு உள்ளே இருந்து பூஜையில் மணியோசை கேட்கிறது. பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் காட்டப்பெறும் பலவித அலங்கார தீபங்கள் அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன.

எல்லையில்லா வெற்றிடத்தில் முதலில் ஒலியே பிறக்கிறது. ஒலியில் இருந்து ஒளி பிறப்பது ஒரு தீபத்தின் மூலம் காட்டப்படுகிறது.ஒலியில் இருந்து இறைவன் அருளால் பல நிலைகளில் உள்ள ஜீவன் பிறப்பதை அடுக்கு ஆரத்தி உணர்த்துகிறது. இப்போது திரை நீக்கப்பட்டு அடுக்கு ஆரத்தியைப் பார்க்கிறோம்.

அண்டவெளியில் புலப்படாதிருந்த உலகம் திரையை விலக்கிக்கொண்டு நமக்குத் தெரிகிறது. இறைவன் உயிரில் கலந்து உருவமாகப் புலப்படுவதும் திரை விலகிய பிறகு இறை வடிவத்தைக் காண்பதும், அதன் முன்னே இருக்கும் அடுக்கு ஆரத்தியும் குறிப்பிடுகின்றன. அடுக்கு ஆரத்தியில் தீபங்கள் பல தட்டுகளில் இருந்தாலும், அவை உருவமற்ற ஒரே பரம்பொருளின் வடிவத்தைக் குறிப்பிடுகின்றன.

பிறகு ஐந்து தட்டுகள் காட்டப்படுகின்றன. இவை சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அதிலிருந்து பஞ்சபூதங்கள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன. பிறகு ஐந்து பூதங்களும் சேர்ந்து பிரபஞ்ச வடிவமாக விளங்கும் கும்பாரத்தி காட்டப்படுகிறது. கும்பம் அண்டத்தையும், அதன் மீதுள்ள தீபம் அதை இயக்கும் இறைவனையும் குறிப்பிடுகிறது.

அதையடுத்து நாகதீபம், மயூரதீபம், குக்குட தீபம், ரிஷப தீபம், கஜதீபம், புருஷாமிருக தீபம், புருஷ தீபம், அஸ்திர தீபம் ஆகியவை காட்டப்படுகின்றன. இவை மூலம் முதலில் ஊர்வன, அடுத்து பறப்பன, அடுத்து மனிதனும் விலங்குமாகிய புருஷாமிருகம், அடுத்து மனிதன், இந்த வளர்ச்சிக்குப் பிறகு வாழ்வதற்கான ஆயுதம் ஆகியனவும் விஞ்ஞான முறையில் காட்டப்பெற்று வருகின்றன.

இவை உருவத்தால் வேறுபட்டிருப்பினும் பஞ்சபூதங்களுக்கு உட்பட்டு இயங்குவன என்னும் பொருள் பெற அவற்றின்மீது பிரபையும் அதில் ஐந்து தீபங்களும் அமைந்துள்ளன. இவ்வாறு ஒரே பரம்பொருளிலிருந்து தோன்றிய ஜீவன் பல நிலைகளைக் கடந்து அறிவால் இறைவனை அறிந்து கொள்கிறது. இந்த ஆன்மா ஒரே ஆரத்தியாகக் காட்டப்பெற்று அதன் பக்குவ நிலையை உணர்த்தும் பொருட்டு அதன்மீது விபூதி தெளிக்கப்பெறுகிறது.

இதைத் தொடர்ந்து ஒன்று முதல் பத்து எண்ணிக்கை வரையுள்ள பத்து தீபங்கள் வரிசையாகக் காட்டப்படுகின்றன. இவை உலக உயிர்கள் பெற்றுள்ள பல்வேறு அறிவு நிலைகளைக் குறிக்கிறது என்பர். இதில் ஆறுவரை உள்ள தீபங்கள் ஓர் அறிவு முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரையுள்ள உயிர்களின் நிலையைக் குறிப்பதாகும். ஏழாவது ஞானத்தை அறிதலையும் எட்டாவது அதில் திளைத்தலையும் ஒன்பதாவது அதிலிருந்து விடுதலை அடைதலையும், பத்தாவது இறைவனோடு இரண்டறக் கலந்து விடுதலையும் குறிக்கின்றன என்பர்.

இதையடுத்து, கண்ணாடி, ஆலவட்டம், சூரியன் , சந்திரன், குடை, வெண்கவரி, ஸ்ரீவத்சம், விசிறி ஆகியவற்றைக்காட்டி உபசாரம் செய்யப்படுகிறது. இவை உயிர்கள் சகல போகங்களையும் பெற்றுச்சுகமுடன் வாழ்வதைக் குறிக்கின்றன. இதையடுத்து மந்திரபுஷ்பம் ஓதுதல், பல்வேறு தேசங்களில் இருந்து வந்த பொருட்களைச் சமர்ப்பித்தல், முதலியன நடைபெறும்.

இது உயிர்கள் நாடு, மொழி, இனம் என்று பலவாறாக விரிந்து மேன்மையுடன் புகழ் பெற்று விளங்குவதைக் குறிக்கும் என்பர். இறுதியில் கற்பூரக்கிளை எனப்படும் ஏழு அல்லது ஒன்பது கிளைகளைக் கொண்ட அமைப்பில் கற்பூரம் ஏற்றிக் காண்பிக்கப்படும்.

கற்பூரம் காட்டப்பட்டதும் அதன் மீது விபூதியிடுவதி போல் மடலிருந்து மூன்று முறை விபூதியை எடுத்துக் காட்டுவர். இதற்கு ரட்சை சாத்துதல் என்பது பெயர். இது உலக உயிர்கள் இறைவனின் அருட்கவசத்தைப் பெறுவதைக் குறிக்கிறது. இதையடுத்து பக்தர்களிடம் அந்த தீபம் வரிசையாகக் காட்டப்படுகிறது. பக்தர்கள் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வர். கற்பூரதீபம் கரைந்து விடுவது உலகம் மீண்டும் அகண்ட வெளியில் உருவமற்றுக் கரைந்து விடுவதை உணர்த்துகிறது.

தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. தீபாராதனை காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும்.