காரிய வெற்றியும் மன அமைதியும் தருமே சிவராத்திரி விரதம்..!

மகாசிவராத்திரி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் கடைபிடிப்பது மகாசிவராத்திரியாகும்.


சிவனின் அருளைப் பெற அதுவும் முக்தியை தரக்கூடிய வல்லமை வாய்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுவது தான் மகாசிவராத்திரி. மகாசிவராத்திரி தினத்தில் நான்கு கால பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். இதில் பங்கேற்று இறைவனை வழிபட வேண்டும். இந்த ஆண்டு சிவராத்திரி விழா பல சிவலாயங்களில் நாடு முழுவதும் கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவிலிலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

சிவராத்திரி விரதம், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை எடுத்துக்கூறுகின்றன. நம்முடைய அன்றாட தேவைகளில் மிக முக்கியமான ஒன்று உணவு, மற்றொன்று தூக்கம். இவை இரண்டிற்காகவும் அனைவரும் ஓயாது உழைத்து சம்பாதிக்கிறார்கள். சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது உணவு, தூக்கம் இரண்டையும் மறந்து, எம்பெருமானின் அருளை வேண்டி நாள் முழுக்க கண்விழித்து விரதம் இருப்பதுதான் இந்நாளின் நோக்கமாகும்.

மகாசிவராத்திரி அன்று கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவபுராணம், எம்பெருமானின் திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நு}ல்களை படிப்பது புண்ணியம் தரும். சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம். மகாசிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்குரிய பொருட்களை வாங்கி ஆலயத்திற்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவபூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நு}று அசுவமேத யாகம் செய்த பலனையும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனையும் தரவல்லது. சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மையை தரும்.

சிவராத்திரி விரதம் மனஅமைதியை தரும்.

'சிவாயநம" என்று சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை.

மகாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபட்டால் காரிய வெற்றியும் உண்டாகும்.

இந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.