தமிழ்நாட்டுக் கோயில்களில் மூலவரைப் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை, ஆனால் வடநாட்டில் அப்படியில்லை! இந்த வேறுபாடு இருப்பது ஏன்?

தமிழ்நாட்டுக் கோயில்களில் மூலவர் விக்கிரகத்தைப் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. உற்சவரைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறார்கள்.


தமிழ்நாட்டின் சில கோயில்களில், ஓவியர்கள் வரைந்த மூலவர் படங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மற்றபடி கோயிலில் இருக்கும் அதே மூலவர் படங்களை அச்சிட்டு விற்பனை செய்வதில்லை. மூலவர் உலகம் என்ற மரத்தின் வேர் போன்றவர். உற்சவர் அந்த மரத்தின் மலர், காய், கனி போன்றவர். வேரை இருக்கும் இடத்தை விட்டு அசைத்தால் மரம் உலர்ந்து போகும்.

மலர், காய், கனிகளை எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோகலாம். மூலவரை அவர் இருக்கும் இடத்தில்தான் தரிசிக்க வேண்டும். அவரைக் கோயிலுக்குச் சென்று தரிசிக்காதவர்களுக்கும்கூட அருள் புரிவதற்காக, அவர் உற்சவமூர்த்தி வடிவத்தில் வீதியில் வருகிறார். மூலவர் வடிவம் ரகசியம். உற்சவ வடிவம்தான் பிரகடனம் என்பது தமிழ்ப்பண்பு.

தென்னிந்தியாவில் பழமையான கோயில்கள் ஆகம சாஸ்திரப்படி அமைக்கப்பட்டு விக்கிரக ஆராதனையும் ஆகமத்தில் கூறியபடி நடந்துவருகிறது. வட இந்தியாவில் இஸ்லாமியர்களின் படையெடுப்புக்களால் பழைய கோயில்கள் சிதைந்து போய், ஆராதனை முறைகளும் பல இடங்களில் சாஸ்திரப்படி இல்லை. அதுதான் வேறுபாட்டிற்குக் காரணம்.