திருநீறு ஏன் நெற்றியில் வைக்கிறோம்? அதன் வகைகள் எத்தனை தெரியுமா?

படை கொண்ட அரசரும் இறுதியில் பிடிசாம்பல் தான் என்பது பழமொழி.


இந்த உலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் இறுதியில் தீயில் வெந்து சாபலாகின்றன. ஆதலால் அறவழியில் நல்ல சிந்தனையோடு தூய்மையான வாழ்வு வாழ வேண்டும். இதனை உணர்த்தவே நாம் நெற்றியில் திருநீறு அணிகின்றோம்.

இறைவன் என்பவன் அழிவில்லாதவன். அவனின் அருட்கொடையான திருநீறுக்கு அழிவு என்பதே இல்லை. திருநீறானது வேறு பொருளாக மாறுவதும் இல்லை. எனவே திருநீறினை நெற்றியில் அணிந்து கொண்டால் அழிவில்லாத இறைவனை அடைவதற்குரிய வழி கிடைக்கும்.

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை கல்பம் அணுகல்பம் உபகல்பம் அகல்பம் கல்பம்: கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

அணுகல்பம்: காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்உபகல்பம்: மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

அகல்பம்: அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்இதில் கல்பம் என்று சொல்லப்படும் வகையான விபூதியே மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. திருநீறினை நம் நெற்றியில் அணிந்து கொள்ளும் பொருட்டு இறைவன் நெற்றியை உரோமம் இல்லாமல் படைத்திருப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன.

விபூதியை ஐஸ்வர்யம் என்று சொல்வர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், “ரட்சை என்ற பெயரும் விபூதிக்கு உண்டு. புருவத்தின் நடுவில் ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக ஜோதி தெரிவதை யோகியர்கள், சித்தர்கள், மஹான்கள், முனிவர்கள், ரிஷிகள் கண்டு சொல்லி உள்ளார்கள். அவ்விடத்தில் தியானம் கைகூடி ஜோதி தெரிய வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.

மந்திர உருப்பெற்ற விபூதி ஒருவரின் ஆத்ம ஜோதியைத் தரிசிக்க வைக்கும். இதுவும் ஒரு வகையான தீட்சை ஆகும். புருவ மத்தியில் விபூதியை வைத்து சூரிய நமஸ்காரம் செய்தால் சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை விபூதி சரியாகச் செய்கிறது. புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரம் உள்ளது. பிட்யூட்ரி சுரப்பியைத் தூண்டச்செய்யும் இடமும் இந்த நெற்றி ஆகும் அந்த ஆக்ஞா சக்கரத்தைத் தியானம் செய்பவர்களுக்கு உடல்  வெப்பம் அதிகரிக்கும். அந்த சூடு தணிய  சந்தனம் பூசுவதும் வழக்கத்தில் உள்ளது..

விபூதி எல்லா வகையான தோஷங்களையும் நீக்கும் தன்மை உடையது. சைவர்கள் விரும்பி அணியும் விபூதி எல்லா மதத்தினர்க்கும் நன்மை பயக்ககூடியது. அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது திருநீறானது நம்மைச் சுற்றிலும் உள்ள நல்ல (பாசிடிவ்) அதிர்வுகளை உள்வாங்கி உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மேலும் சூரிய கதிர்களை ஈர்த்து சரியான அளவு உடலுக்குள் செலுத்தும் சக்தியை திருநீறானது பெற்றிருக்கிறது. எனவே உடல் மற்றும் உள்ள மேன்மைக்காக நம் முன்னோர்கள் திருநீறினை அணிந்துள்ளனர்.