சிவ ரூப அக்னி பகவான்... சூரிய தேவனை வணங்க தயாராகுங்கள்!

நம் பூமிக்கு ஞானத்தை அளிப்பவர், வாழ்க்கையைப் படைப்பவர் ஆதித்ய தெய்வம்.


அவரிடமிருந்து பூமியின் மேல் கதிரொளி வீசுகின்ற கிரணக் கற்றைகள் ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஓர் ஆண்டில் 12 ராசிகளில் சஞ்சாரம் செய்தபடி 12 மாத காலத்தை ஒரு சுற்றாக (ஆவிருத்தி) ஏற்பாடு செய்பவன் பாஸ்கரன். உண்மையில் சூரியன் உதித்து மறைவதில்லை. ஆனால் சுழன்று கொண்டிருக்கும் பூமியின்மேல் வசிக்கும் நாம் ஒப்பீட்டுக் கண்ணோட்டத்துடன் கவனித்து.

நமக்கு அனுகூலமான பரிபாஷையில் ‘சூரிய கமனம்’ என்கிறோம்.சூரியனின் கிரணக் கற்றைகள் பரவுதலே ‘சூரிய கிரமணம்’ அதாவது சூரியனின் நகர்வு இக்கிரணங்கள் நாமிருக்கும் பூகோளத்தின் தன்மையை ஒட்டி உத்தராயணத்தில் ஒரு விதமாகவும், தக்ஷிணாயனத்தில் வேறு விதமாகவும் இருக்கும். ஜல தத்துவத்திற்கு முக்கியத்துவமளிக்கும் தக்ஷிணாயனம் ‘சோம தத்துவம்’ எனப்படுகிறது. அக்னி (உஷ்ணம்) தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது உத்தராயணம். இவ்விரண்டும் சேர்ந்ததே ஓராண்டு. ஆண்டு என்பதே காலக் கணிப்பிற்கு ஆதாரம்.

இதனைப் பிரதானமாகக் கொண்டே யுகங்களைக் கணக்கிடுகிறோம். உத்தராயணத்திலும் ஜல தத்துவம் இல்லாமலில்லை. ஆனால் பிரதானமானது அக்னி தத்துவமே. அதே போல் தக்ஷிணாயனத்தில் ஜல தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்தபடியே அதற்குத் துணையாக அக்னி தத்துவமும் இருக்கிறது. சூரிய கிரணங்களிலேயே இந்த அக்னி, ஜல சக்திகள் இரண்டுமிருக்கின்றன. சுத்த வெளுப்பான சூரிய ஒளி, ஜல சக்தியாலேயே பல வர்ணங்களாக ஒளி வீசுகிறது.

எனவே தான் இக்கிரணங்கள் போஷிக்கும் சகல ஜீவராசிகளும் கூட அக்னி, ஜல தன்மைகள் இணைந்த உருவங்களாக உள்ளன. இந்த ரகசியத்தை, ‘அக்னி ஷோமாத்மகம் ஜகத்’ என்று வேதம் போற்றுகிறது. அக்னியை சிவ தத்துவமாகவும் ஜலத்தை (சோம) சக்தி தத்துவமாகவும் கொண்டு, உலகையும் காலத்தையும் சிவசக்தி ஸ்வரூபமாக தரிசித்து வழிபடும் அறிவே, யக்ஞமாக, பூஜையாக நம் சம்பிரதாயங்களில் இடம் பெற்றுள்ளது.

பகல் அக்னி (சிவ) ஸ்வரூபம், இரவுச் சக்தி (ஜகதம்பாள்) ஸ்வரூபம்… ஓர் ஆண்டுக்குப் பகல் போன்றது உத்தராயணம். தினங்களுள் பகல் தொடங்கும் போது தெய்வ பூஜை செய்து பின் நம் வேலைகளைத் தொடங்குகிறோம். அதன் மூலம் வேலை செய்யத் தேவையான சங்கல்பம், செயல், சித்தி (வெற்றி) - இம்மூன்றும் திவ்ய சக்தியால் பவித்திரமாகி காரிய சித்தியை அளிக்கின்றன. அதே போல் ‘உத்தராயணம்’ எனப்படும் ஆண்டின் பகல் பாகம் ‘மகர சங்க்ரமண’த்துடன் தான் (மாதப் பிறப்பு) தொடங்குகிறது.

ஒளியை வழிபடும் பாரத மக்கள் வெளிச்சத்திற்கு பூரண பிரகாசத்தையளிக்கும் உத்தராயண ஆரம்பத்தை (மகர சங்கராந்தியை) பரம புண்ணிய தினமாகக் கொண்டாடுகிறார்கள். இது ஆண்டிற்கு ‘ப்ராத’ சந்தியாகாலம்’ அதாவது காலை வேலை. அதே போல் ஆடி மாதத்தில் பிரவேசிக்கும் ‘கடக சங்க்ரமணம்’ (கடகச் சேர்க்கை) ஆண்டிற்கு ‘சாயம் சந்தியா காலம்’ அதாவது மாலை வேளை.

எனவே தான் அதனைக் கூட புண்ணிய காலமாகப் போற்றுகிறோம். பருவ காலத்தில் பளிச்சென்று தென்பட்டு அனுபவத்திற்கு வருகின்ற தெய்வீகமான ஒரு மாற்றம் ‘மகர சங்க்ரமணம்’ (மகரச் சேர்க்கை) ஒளியின் பயணத்தில் ஏற்படும் மாற்றத்தை நேரடியாக அனுபவிக்கும்.

இந்த பருவ காலத்தின் போது தான், இந்த மாற்றத்தில் அதாவது ‘க்ராந்தி’யில் நன்மையே நிகழவேண்டும் என்று ‘வெளிச்சக் கடவுளான’ சூரியனை வேண்டிக் கொள்கிறோம். இந்த புண்ணிய தினத்தில் தெய்வீக சக்திகளை எளிதாகப்பெற முடியும் என்பார்கள். எனவே தான் இந்த நாளில் தியானம், தானம், ஜபம் போன்ற அனுஷ்டானங்களும், பித்ரு தர்ப்பணம் போன்ற நற்காரியங்களும் அமோக பலனளிக்கும் என்பது சாஸ்திர வாக்கு.யக்ஞத்தில் முதல் அறுவடை செய்த நெல்லைக் குத்திப் பெற்ற அரிசியால் சமைத்து தேவதைகளுக்குப் ப்ரீதியாக ஆஹூதி அளிப்பது நம் சம்பிரதாயம்.

இந்த யக்ஞத்தின் அம்சமாகவே புது அரிசியில் பாயம், பொங்கலிட்டு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் சாமான்ய ஜனங்களிடையே கூட பிரபலமாக உள்ளது.சூரிய கிரணங்களே, ஒளி உருவம் படைத்த தேவதைகளுக்கு ராஜவீதிகள், ஆதித்யனிடமிருந்து நம்மிடம் வரும் திவ்ய அனுக்ரகமும் சரி, நம்மிடமிருந்து சூரிய மண்டலத்திலிருக்கும் பரமேஸ்வரனுக்கு சமர்பிக்கப்படும் பக்தி நமஸ்காரங்களும் சரி, இந்த கிரணங்களின் மார்க்கமாகவே பயணிக்கின்றன.

அதாவது சூரிய கிரணங்கள் நமக்கும் தெய்வத்திற்கு நடுவில் உள்ள தொடர்பு என்று ஆகிறது. இவ்வொளிக் கிரணக் கற்றையே யக்ஞத்தில் எழும்பும் அக்னி ஜ்வாலை. சங்கராந்தியை சரிவரக் கொண்டாடுவதே மனிதன் செய்யக் கூடிய மிகப் பெரிய யக்ஞம்.

உடல் ஆரேக்கியத்தை அளிப்பவரும், மழை பெய்ய காரணமானவரும், இதய நோயை நீக்குபவரும், ஆன்மாவை எழுப்பி தன்வழிப் படுத்துபவருமான சூரியனை போற்றுவோம்.