புரட்டாசி சனிக்கிழமைக்கு தனி மகிமை உண்டு! என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

திதிகளில் மிகவும் போற்றப்படுவது அமாவாசை.


இந்நாளில் வழிபாடுகள், முன்னோர்களுக்கான பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கு உகந்த நாள் என்கிறது சாஸ்திரம். அந்த வகையில் ஒவ்வொரு அமாவாசை தினத்திற்கும் ஒரு சிறப்பும் மகிமையும் உண்டு. அதன்படி, சனிக்கிழமையில் வரும் அமாவாசை பல மடங்கு சிறப்பினைப் பெறுகிறது. 

அதுவும் இந்த வருடம் புரட்டாசி மாதம் அமாவாசை சனிக்கிழமை வருகிறது. இந்த சனிக்கிழமை அமாவாசையில் தான் ஆரிய புத்திரனான சனிபகவான் ஜெயந்தி வடநாட்டில் கொண்டாடுகிறார்கள் சாஸ்திரப்படி சனி அமாவாசை அன்று சனி ஜெயந்தியாக இருப்பதால் சனிபகவானுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, மங்குசனி, மரண சனி எனப்படும் ஏழரை நாட்டு சனிகள், கண்டகமாரக சனி தோஷங்கள் என்கிற விதவிதமான சனி தோஷங்கள் ஆகியவைகள் சனி பகவான் அருளால் வலுவிழந்து நிவர்த்தியாகும். 

சனி பகவான் சூரிய பகவானின் புத்திரன்.  சூரியனின் மூதல் மனைவியான உஷையின் நிழலிலிருந்து தோன்றிய பிரத்யுஷை என்பவளின் மகனாவார். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவன் மந்தன். இவனே கிரகங்களில் ஒன்றான சனி பகவான் ஆவார், மேலும் உஷையின் மகன் யமன்,  மகள் யமி ஆவார்கள்.  சாயாதேவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. சாவர்னி, மனு, சனைச்சரன். சனைச்சரன் பிறவியிலேயே கருப்பு நிறம் கொண்டவர். ஒரு சமயம் யமனுக்கும் சனைச்சரனுக்கும் ஏற்பட்ட சண்டையில் யமன் ஆனவன் சனைச்சரனின் காலில் கதாயுதத்தால் தாக்கவே, ஒரு கால் பாதிக்கப்பட்டு நொண்டியானார்.  

கருமை நிறத்திலான தன்னை அனைவரும் கேவலப்படுத்துவதாலும், காலில் ஏற்பட்ட ஊனத்தாலும் வேதனையடைந்த சனைச்சரன் சிவபெருமானை நோக்கிக் காசியில் கடுமையான தவம் இருந்து நவகிரகங்களில் ஒரு இடத்தை பெற்றார். அத்துடன் ஈஸ்வரன் என்ற பட்டத்தையும் பெற்றார். அந்த நாள் சனிக்கிழமை அமாவாசை என்கிறது புராணம். எனவே சனிக்கிழமையில் வரும் அமாவாசை திதியை வடநாட்டிலில் சனி ஜெயந்தி  என்று கொண்டாடுகிறார்கள். அன்று ஆலயங்களுக்குச் சென்று சனி பகவானுக்கு நீல நிற மலர் மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். 

சனி அமாவாசை மிக மிக அபூர்வமான தினமாகும். அன்று சனி பகவானை முறைப்படி வழிபட்டால் வாழ்க்கையில் இருந்துவந்த தடைகள், தோஷங்கள் விலகி குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.  இந்த வருடம் செப்டம்பர் 28ஆம் தேதி மாளய அமாவாசை சனிக்கிழமை வருகிறது. அன்று பிண்ட பித்ரு பூஜையை, புனித நீர்நிலைகளில் மேற்கொள்வதுடன் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சனி பகவானுக்கு அர்ச்சனை ஆராதனைகள் செய்து கருப்பு எள் படைத்து நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடலாம்.  

பொதுவாக சனி பகவான் என்றால் ஒவ்வொருவருக்கும் அச்சம் ஏற்படுவது இயற்கை. ஆனால் உண்மையில் தண்டிக்கும் தெய்வம் அல்ல சனிபகவான். திருத்தும் தெய்வம், நல்வழிகாட்டும் தெய்வம். 

சனி பகவானை நேராகப் பார்த்து நின்று வழிபடாமல் சற்று ஒதுங்கி இடப் பக்கமாக நின்று வழிபட வேண்டும். ஏனெனில் சனிபகவானின் பார்வை நேரிடையாக நம்மீது படக்கூடாது என்பது தான். கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்ற பெருமைக்கு உரியவர் சனிபகவான். தன்னை வழிபடுபவர்களின் வாட்டங்களைப் போக்கும் வல்லமை படைத்தவர். நம்மை நல்வழிப்படுத்தி இன்ப துன்பங்களை கர்ம வினைப்படி செயல்படுத்தி வாழ வைக்கும் தெய்வம் சனிபகவான்.  

எனவே சனிக்கிழமை வரும் அமாவாசை, சனி ஜெயந்தி என்பதால் அன்று வழக்கம்போல் பிதுர்பூஜை மற்றும் தெய்வ வழிபாடுகளை முடித்தபின் சனிபகவான் எழுந்தருளியுள்ள நவக்கிரக தொகுப்பில் வழிபடலாம். ஓம் சனைச்சராய நமஹ என்று எட்டு தடவை ஜெபித்து வழிபட வாழ்வில் வசந்தம் வீச சனி பகவான் அருள் புரிவார்.