பிள்ளையார் யானை முகத்துடன் இருக்கும் பிறப்பின் ரகசியம் தெரியுமா?

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.


ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அது ஒரு ஆண்குழந்தையாகும்படி கீழேபோட்டதும் அது ஆண் குழந்தையாகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து – “நான் குளித்துவிட்டு வரும்வரையில் வேறு யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி அதை வாயிற்படியில் உட்காரவைத்ததாக கூறுவார்கள்.

 அந்த சமயத்தில் பார்வதியின் புருசனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக்கொண்டு இருப்பதால் உள்ளேப் போகக்கூடாதுஎன்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கும் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்த பிள்ளையார் தலையை கீழேத் தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்கு போனதாகவும், கூறுவார்கள்.

பார்வதி சிவனைப்பார்த்து, “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்?” என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கிய குழந்தை வெட்டுண்டதற்காக புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி வெட்டுண்ட தலை காணாமல் போனதாக சொல்லுவார்கள்.

பிறகு அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்தது, பார்வதியை திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகிறது, இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்கள் இருக்கின்றனவாம்

ஒரு காட்டில் ஆண்பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டு கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்று இருக்கையில் ஒரு அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாக புகுந்து அக்கருசிசுவின் தலையை வெட்டிவிட்டதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையைப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.