நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி.
நெருப்பை இந்துக்கள் வணங்க காரணம் என்ன தெரியுமா?

தீயை முதன்மைபடுத்தி வணங்குவது இரண்டு மதங்கள்
1. ஜோராஷ்ட்ரியம் Zoroastrianism
2. இந்துக்கள்
ஜோராஷ்ட்ரியம் ஈரானியர்களின் ( பாரசீகம்) மதம். இவர்கள் நெருப்பை வணங்குபவர்கள். இவர்கள் ஆலையங்கள் தீக்கோயில், நெருப்பு கோயில்கள் என்றே அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் இவர்கள் வீடுகளிலும், திறந்த வெளிகளிலுமே நெருப்பை வணங்கி வந்தார்கள்.
இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகுக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும்.
இந்த குணங்களைக் கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி. அதுமட்டுமல்ல, நெருப்பு இடையறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும்.
நெருப்பு என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன். எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபட்டால் போதும்.
நெருப்பு மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம்.