முருகப் பெருமான் வாகனமாக மயில் இருப்பதற்குப் பின்னே இத்தனை தத்துவம் இருக்கிறதா?

மயில் அழகில் சிறந்தது மட்டுமல்ல, அமைதியிலும் சாதுவான பறவை.


அரக்க குணங்கள் கொண்ட பதுமசூரனின் உடலில் ஒரு பாதியை மயிலாகவும், மற்றொன்றை சேவல் கொடியாகவும் மாற்றினார் முருகப் பெருமான். அதில் மயிலை தன்னுடைய வாகனமாக வைத்துக் கொண்டார். அதற்கு உண்மையான தத்துவம், மனிதர்களிடம் இருக்கும் அசுர குணம் இறைவனை சரணடையும் போது சாதுவாக மாறிப்போகும் என்பதாகும். 

மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான். தனக்கு அழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான். தன்னால் நினைத்துப் திட்டமிடக் கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான். கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால் எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான்.

இதில் ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதை உணரமுடிவதில்லை. இந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும். அவனுள் இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் அந்தப் பண்பட்ட மனத்தை வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும் சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார். 

ஆணவம் என்கின்ற சூரன்தான் முருகன் அருள் பெற்று மயிலாகி நிற்கிறான் என்பது பெரியோர்களது கருத்து. இருப்பினும் போர் சமயத்தில் இந்திரனே மயில் வாகனமாக வந்து பணி புரிந்தான் என்பதும் புராணங்கள் வாயிலாக அறியக் கூடிய செய்தி. தான் என்ற அகங்காரம் ஒழிந்து பணி செய்ய நினைக்கும்போது பரம்பொருளின் திருவடிவில் இருக்கும் பெரும் பேறு கிட்டும் என்பதையே முருகனது மயில்வாகனம் உணர்த்துகிறது. மேலும் உலக சிற்றின்பங்களில் திளைத்தபடி ஆடுகள் கூடாது என்பதையும் உணர்த்தி நிற்பது மயில்வாகனம். 

மயிலுக்கும் - பாம்புக்கும் பகைமை உண்டு. மயில் பாம்பைக் கொல்லுவதில்லை. ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறது. அதைப்போல உலக பந்தங்கள், ஆசைகள் எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டுமானால், இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும். இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கிவைக்கும் பாம்பு நமக்கு உணர்த்துகிறது.