ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

அம்மன் வழிபாட்டிற்கு உரிய ஆடி மாதத்தில் நாம் பின்பற்றும் பல விஷயங்களுக்குப் பின் அறிவியலும் இருக்கின்றன.


இன்றைய கால சூழலில் நாம் செய்யும் அனைத்தையும் ஏன் எதற்கு என்று தெரியாமல் செய்கிறோம். ஆனால் நமது முன்னோர்களின் காலத்தில் வகுக்கப்பட்ட ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கு பின்பும் அறிவியல் இருந்தது. அந்த வகையில் ஆடி மாதத்தில் நாம் ஏன் அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறோம் என்று பார்ப்போம்.

இன்றைய காலகட்டத்தில் பல நவீன தடுப்பூசிகளால் அம்மை நோய் பரவலாக குறைந்துள்ளது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நோயின் தாக்கம் ஆடி மாதத்தில் அதிக அளவில் இருந்துள்ளது. இதற்குக் காரணம் இந்த ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலையே ஆகும். இந்த மாதத்தில் ஒரு விதமான அதீத வெப்பமும் வறட்சி காற்றும் அதிகம் இருக்கும். இதனால் இனம்புரியாத பல நோய்கள் மக்களை தாக்கின. அதில் மிக கொடியதாகக் கருதப்பட்டது அம்மை நோயே. இதனால் சிலர் மாண்டும் போனார்கள்.

கேழ்வரகு மற்றும் கம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது அதோடு கம்பை உண்பதால் உடலில் குளிர்ச்சி ஏற்படும் என்பதால் இந்த சமயத்தில் கம்பு மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தினர். ஆனால் இந்த கூழை அனைவராலும் உண்ண முடியவில்லை. கரணம் இந்த ஆடி மாதத்தில் தான் கடும் பஞ்சமும் நிலவியது.

பஞ்சம் போக்கவும், பயிர் செழிக்கவும், தட்ப வெப்ப நிலை மாறி நோய்கள் தீரவும் மழை அவசியம் என்பதை மக்களிடம் கூறி மாரி தாயை வணங்க செய்தனர். கம்பு, கேழ்வரகு இருப்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் அம்மனுக்கு கூழ் ஊற்றும்படி செய்தனர்.

இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி முனிவரை, பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி, துக்கம் தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் தன்னுடைய உயிரையும் விட முடிவு செய்த ரேணுகாதேவி, தீயை மூட்டி அதில் இறங்கினார். அப்போது இந்திரன் மழை பொழியச் செய்து தீயை அணைத்தான். இருப்பினும் தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார். பின்னர் பசியைப் போக்கிக் கொள்ள அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார்.

அங்குள்ள மக்கள், அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாகக் கொடுத்தனர். அதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட்டார், ரேணுகாதேவி. அப்போது அவர் முன்பாக தோன்றி சிவபெருமான், “உலக மக்களின் அம்மை நோய் நீங்க, நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும்என்று வரம் அளித்தார்.

இந்தச் சம்பவத்தை நினைவு கூரும் வகையில்தான், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.