27 நட்சத்திரத்துக்குமான ராசி சக்கர ஆலயம்! வரம் தரும் வள்ளலை தரிசிக்க வாருங்கள்!

திருச்சியில் இருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் பகளவாடி.


இங்கே காவிரி ஆற்றுக்கு வடக்கில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளது அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். 27 நட்சத்திரங்களுடன் கூடிய ராசிச் சக்கர பீடத்தின் மீது ஆலயம் அமைந்திருப்பது விசேஷம். சித்த புருஷர்களில் ஒருவரான சாரங்கநாதர் ஸித்தி அடைந்ததும் இங்குதான் என்கிறார்கள். முற்காலத்தில் மன்னர்களும் சிற்றரசர்களும் இந்த ஆலயத்தில் திருப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இங்குள்ள அன்னசத்திரம் ராணி மங்கம்மாவால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு. பல படிநிலைகளாகத் திகழ்கிறது பீடம். முதலில் நான்கு கோணங்கள் நான்கு வேதங்களைக் குறிக்கும். இரண்டாம் நிலையின் எண் கோணங்கள் அஷ்டதிக் பாலகர்களையும், மூன்றாம் நிலையின் 16 கோணங்கள் 16 செல்வங்களையும் குறிக்கும். நான்கு மற்றும் ஐந்தாவது நிலைகள் 64 கலைகளைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளன.

ஆறாவது நிலையில் வாசுகி நாகம் திகழ அதற்கும் மேலுள்ள ஏழாவது நிலையில் அஷ்டதிக் கஜங்களும், நாகங்களும் காவல் புரிகின்றன. இவற்றுக்கு மேலே அமைந்துள்ள பாகத்தில் 12 ராசி - லக்னங்களும், 27 நட்சத்திரங்களும் நவகிரகங்களும் அமைந்துள்ளன. இந்தப் பீடத்தை வியாக்ரபாதர், பதஞ்சலி, சாரங்கநாதர் ஆகிய சித்த புருஷர்கள் அமைத்ததாகச் சொல்கிறது தலபுராணம்.

அன்பர்கள் இந்த கோவிலுக்கு வந்து தமக்குரிய ராசியின் முன் நின்று முதலில் குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபட்டு பிறகு இங்குள்ள அம்மையையும் அப்பனையும் தரிசித்து தங்கள் வேண்டுதல்களை சொல்லி பிரார்த்தித்தால், விரைவில் அந்த வேண்டுதல்கள் பலிக்கும் என்பது நம்பிக்கை.

மூலவர் ஏகாம்பரேஸ்வரர் கேட்டவரம் தரும் வள்ளலாக திகழ்கிறார். கிரகங்களும் நட்சத்திரங்களும் தொழும் இந்த இறைவனை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். நவகோள்களும் நன்மையே அருளும். திருமணப்பேறு, குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு ஆகிய வேண்டுதல்கள் நிறைவேறும். அமர்ந்த நிலையில் அருளும் அம்பிகை காமாட்சியை தரிசித்தாலே போதும் நம் கவலைகள் எல்லாம் தீரும் என்கிறார்கள் பக்தர்கள்.

சாரங்கநாதர் எனும் சித்தர் இந்த ஆலயத்தில் ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டதாகவும், அவர் இந்த ஆலயத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும் கருதப்படுவதால், அவர் நினைவாக துளசி மாடமும், அதன் அருகில் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சித்தர் சன்னிதியில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மாலையில் யாக வேள்வியும், 210 சித்தர்களின் தமிழ் போற்றி வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகிறது. இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்ற பக்தர்கள் தங்களது ஜாதக குறிப்பினை வைத்து எடுத்துச்செல்கின்றனர்.

இங்கு 27 நட்சத்திரங்களுக்கு உரிய விருட்சங்கள் உள்ளன. பக்தர்கள் அவரவர் நட்சத்திற்குரிய விருட்சத்தை வணங்குவதும் தேவைக்கு ஏற்ப நீர் ஊற்றுவதும் சிறப்பு. இதனால் எதிர்மறை சிந்தனைகள் நீங்கி மனதில் புது நம்பிக்கை பிறக்கும். ஆலயத்தின் அக்னி மூலையில் தீர்த்தக் குளம் உள்ளது. ராமர் சொல் கேட்டு அக்னிபிரவேசம் செய்த சீதாதேவி, இக்குளத்தில் நீராடி இங்குள்ள சிவனை வழிபட்டதாக ஐதீகம். எனவே இந்த குளத்திற்கு ‘சீதாதேவி குளம்’ என்ற பெயரும் உண்டு.

இந்தக் கோவிலுக்கு அருகில் பரந்தமலை என்னும் மலை உள்ளது. அங்கு சப்தகன்னியர்களும், வற்றாத சுனையும் உள்ளது. எல்லா காலத்திலும் அந்த சுனையில் நீர் இருந்து கொண்டே இருக்கும். மேலும் அங்கு சித்தர்கள் வாழ்ந்த சிறிய குகைகளும் காணப்படுகின்றன.5