தமிழக பட்ஜெட்டுக்கு ராமதாஸ் ஜால்ரா! கூட்டணிக்காக அந்தர் பல்டி!

பட்ஜெட்டை கன்னாபின்னாவென்று விமர்சனம் செய்வதுதான் ராமதாஸ் ஸ்டைல். ஆனால், இந்த முறை பன்னீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில விஷயங்களைத் தேடிப்பிடித்து பாராட்டி இருக்கிறார் ராமதாஸ். ஏனாம்..?


தமிழகத்தில் அ.தி.மு.. கூட்டணிக்குள் ராமதாஸ் வந்துவிட்டார் என்பதற்கு உதாரணமாகத்தான் ராமதாஸ் வெளியிட்டுள்ள பட்ஜெட் அறிக்கையைச் சொல்கிறார்கள். இந்த அறிக்கையை தினகரன், ஸ்டாலின் தொடங்கி அத்தனை எதிர்க்கட்சிகளும் திட்டித் தீர்த்துவிட, இவர் மட்டும் தடவிக் கொடுத்திருக்கிறார்.

இதோ அவரது பட்ஜெட் அறிக்கையில் சில பகுதிகள்.

"தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். அத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட ஒரு சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் மீதமுள்ள அறிவிப்புகள் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகவும், ஏமாற்றம் அளிப்பவையாகவும் அமைந்திருக்கின்றன.

55 ஆண்டுகளாக விவசாயிகளால் வலியுறுத்தப்பட்டு வரும் கனவுத்திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் அத்திட்டம் அடுத்த இரு ஆண்டுகளில் செயல்வடிவம் பெறக்கூடும். தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலை மேம்படுத்த இன்னும் 40-க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ள நிலையில், அதற்கான பாசனப் பெருந்திட்டத்தை வகுத்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும், சென்னை மெட்ரோ தொடர்வண்டி சேவை வண்டலூர் வரை நீட்டிக்கப்படும் என்பதும் வரவேற்கப்பட வேண்டியவை ஆகும். இவை போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றுவது மட்டுமின்றி, போக்குவரத்து சார்ந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் இரு ஆண்டுகளில் 1,000 மதுக்கடைகளை மூடப்பட்டன. அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அதுகுறித்த அறிவிப்புகளை வெளியிடாமல், கடந்த காலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளின் எண்ணிக்கையை மட்டும் அரசு வெளியிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த புள்ளிவிவரங்களால் மக்களுக்கு பயனில்லை.

தமிழகத்திலுள்ள நிலங்களை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் நிலப்பயன்பாட்டுக் கொள்கை வகுக்கப்படும், மாநிலம் முழுவதும் திட்டமிட்ட வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டை மொத்தம் 9 நிலையான மண்டலங்களாகப் பிரித்து அவற்றுக்கான மண்டலத்திட்டங்கள் வகுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை ஆகும். எனினும், 9 நிலையான மண்டலங்கள் வீட்டு வசதிக்காகவும், நிலப்பயன்பாட்டுக்காகவும் மட்டுமே வகுக்கப்படுவதாக தெரிகிறது. இத்திட்டத்தை விரைவுபடுத்தி தமிழகத்தை பல்வேறு பொருளாதார மண்டலங்களாக பிரித்தால் தொழில் வளர்ச்சியையும், அதன் மூலம் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க முடியும் என்பதை அரசு மனதில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் தமிழக நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க சில அம்சங்கள் இடம்பெற்றிருப்பது உண்மை. அதேநேரத்தில், அதன் பெரும்பாலான அம்சங்கள் ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நேரத்திற்கு ஏற்ப பல்டி அடிப்பதில் ராம்தாஸ் கில்லாடி என்பதை இந்த அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ராமதாஸ்.