பிரிவு துயரில் வாடுகிறீர்களா? ராமபிரானை வழிபட்டு துயர் நீங்குங்கள்!

தமிழ் நாட்டில் விவசாயத்தைப் பரம்பரைத் தொழிலாகக் கொண்ட கிராமங்களில் நடுநாயகமாக சாவடி எனப்படும் கட்டடம் இருக்கும்.


இது சகல மக்களும் சற்றே ஓய்வாக அமர்ந்து இருந்து பேசி கலையும் பொது இடம். இதுபோன்ற சாவடி ஒன்று பழம் பெருமைமிக்க புராதன நகரமான மதுரையிலும் இருந்தது. நாடெங்கிலும் இருந்து மதுரைக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் அங்கு தங்கி இளைப்பாறுவர். அந்த சமயங்களில் அங்கே ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறும். அதன் மூலம் மக்கள் இதிகாச புராணக் கதைகளை அறிந்ததோடு சமூகத்தில் நல்ல பழக்க வழக்கங்களை வளர்ப்பதற்கு பேருதவியாகவும் அந்தச் சாவடிகள் விளங்கி வந்தன.

மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி நடைபெற்ற வேளையில் திருமலை நாயக்கர் இச்சாவடியில் வசந்த மண்டபத் திருப்பணியை செய்தார். அதோடு நாள்தோறும் ராமாயண சொற்பொழிவு நடைபெறவும் ஏற்பாடு செய்தார். அன்று முதல் இதை இராமாயணச் சாவடி என்றே மக்கள் அழைத்து வருகின்றனர்.

வடக்கு பார்த்த வண்ணம் இச்சாவடி அமைந்துள்ளது. பிரதான வாசல் தாண்டியதும் 14 தூண்கள் தாங்கிய வசந்த மண்டபம் உள்ளது. ஒவ்வொரு தூணிலும் புராணக் கதைகளோடு தொடர்புள்ள நுண்ணிய வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரு தூணில் மன்னர் திருமலை நாயக்கர் மற்றும் அவரது மனைவியின் சிற்பங்களும் மண்டப விதானத்தில் 12 ராசிகளைக் கொண்ட புடைப்பு சிற்பமும் பாண்டியரின் இலச்சினையான இரட்டைக் கயலும் செதுக்கப்பட்டுள்ளன.

வசந்த மண்டபத்தை அடுத்து மகாமண்டபம், அர்த்தமண்டபம் கருவறை என்கிற அமைப்பில் மூலச் சாவடி அமைந்துள்ளது. துவக்க காலத்தில் வடக்கு பார்த்த வண்ணம் முழுமுதல் கடவுளான விநாயகரையே மூலவராக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் ராமபிரானின் காவிய கதையை இம்மண்டபத்தின் தினமும் சொல்லப்பட்டதால் சீதாபிராட்டி லட்சுமணன் அனுமன் ஆகியோருடனான இராமபிரானின் சன்னதி கிழக்கு பார்த்த வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

பழனியை சேர்ந்த நாச்சிமுத்து சுவாமிகள் என்கிற யோகி மண்டபத்தில் தங்கி பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார். குறிப்பாக இதே வீதியில் நவநீத கிருஷ்ணர் கோயிலை அழகிய சுற்றளியாய் அமைத்த இவர் இங்குள்ள ராமாயணச்சாவடியில் மேற்கு நோக்கி ஒரு சன்னதியைக் கட்டி அதில் பழனி தண்டாயுதபாணியை பிரதிஷ்டை செய்துள்ளார்.

இராமயணச் சாவடியில் தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. ஆண்டு முழுவதும் அனேக விழாக்கள் நடத்தப்படுகிறது. செவ்வாய் வெள்ளி கார்த்திகை அமாவாசை பௌர்ணமி ஆகிய நாட்களில் மூன்று சன்னதிகளிலும் திருமஞ்சனம் அலங்காரம் ஆராதனை நடைபெறுகிறது. ஸ்ரீராமநவமி ஒட்டி சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெறும்.

வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு ராமபிரானுக்கு பத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடு, கந்த சஷ்டி 7 நாள் விழா, கார்த்திகை மகா தீபம், மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, தைப்பூசம், சங்கடஹரசதுர்த்தி என பல விழாக்களும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் உற்சவத்தையொட்டி அன்னை மீனாக்ஷி இராமாயண சாவடியில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது. அதேபோல நவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோயில் ராமபிரான், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் மூன்றாம் நாளில் அனுமந்த வாகனத்தில் இங்கு எழுந்தருளுவது வழக்கம். மேலும் ஆடி பவுர்ணமி அன்று நவநீத பெருமாள் கோவிலிலிருந்து புறப்பாடாகி கட்டிக்குளம் சென்று திரும்பும் வழியில் இங்கே எழுந்தருளுவார்.

தம்பதிகளிடையே ஏற்படும் பிரிவு, சகோதரர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் இடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவு போன்ற சங்கடங்களால் பாசப்பிணைப்பு அறுந்து வருந்துவோர், மூன்று சனிக்கிழமைகள் இங்கே வந்து ராமபிரானை வழிபட்டு வர விரைவில் பிரிந்தவர்கள் கூடுவதும், அகமும் முகமும் மலர உள்ளங்களில் ஒற்றுமை உருவாகி இணைவதும் அனுபவபூர்வமான உண்மை.