புற்றாக வளர்ந்து நிற்கும் சித்தர் – நோய் தீர்க்கும் ராஜரிஷி ராமர் பாண்டியன்!

நெல்கட்டும்செவல் ஜமீன்தாரை பற்றி பலரும் அறிந்திருக்கலாம். அவர் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட மன்னர். ஆனால் அவரது வாரிசுதாரர் ஒருவர் சித்தராக வாழ்ந்திருக்கிறார் என்ற செய்தி எத்தனை பேருக்கு தெரியும்.


18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த வரலாறு இது. நெல்கட்டும் செவல் பாளையத்தின் ராணி, கோமதிமுத்து நாச்சியார். ராணியின் கணவர் ராமர் பாண்டியன், ஒரு வித்தியாசமான மனிதர். கோமதிமுத்து நாச்சியாருடன் குடும்ப வாழ்க்கை நடத்தும் போதே, ராமர் பாண்டியனின் மனம் துறவு வாழ்க்கையை நாடிச் சென்றது. தம்பதிகளின் ஐந்து வருட இல்லற வாழ்க்கையில் ஆண் குழந்தை பிறந்தது. அதுவும் கொடி சுற்றிப் பிறந்தது. கொடி சுற்றிப்பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது.

குறிப்பாக தாய்மாமனுக்கு ஆகாது என்று அரண்மனை ஜோதிடர்கள் கூறிவிட்டார்கள். திகைத்தார் கோமதிமுத்து நாச்சியார். குழந்தைக்கு அமுது கொடுக்காமலும் கவனிக்காமலும் விட்டு விட்டார். குழந்தை இறந்துவிட்டது. மனமுடைந்தார் ராமர் பாண்டியன். அவரால் அரண்மனையில் இருக்க முடியவில்லை. கால்போன போக்கில் நடந்தார். கண்காணாத தேசத்துக்கு சென்றுவிட்டார்.

கணவனைக் காணாத கோமதிமுத்து நாச்சியார், கவலையில் மூழ்கினார். தந்தை புலித்தேவர், சகோதரர்கள் சித்திர புத்திரதேவர், சிவஞான பாண்டியன் ஆகியோர் ஆரம்ப காலகட்டத்தில் ஆதரவு தந்தனர். தந்தையும், சகோதரர்களும் மரணமடைந்து விட்ட பின்னர்தான், தானே ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை வந்து விட்டது. தனது ஆட்சிக்கு துணையாக ராமர் பாண்டியனை எட்டு திக்கும் தேடினார்கள். அரண்மனையைச் சேர்ந்த சங்கு முத்துப்பிள்ளை என்பவர் அவரை தேடி அலைந்து கொண்டிருந்தார்.

திருவாவடுதுறை ஆதினத்தில் ஒருவர் ஆன்மிகத்தில் மூழ்கி வழிபாடுகளில் தினமும் கலந்து கொண்டார். நந்தவனத்தைப் பராமரிக்கும் தோட்டக்காரனாக பணிபுரிந்தார். அவர்தான் ராமர் பாண்டியன். அங்கு தன்னை அரசனாக அவர் காட்டிக் கொள்ளவில்லை. காவி உடையில் காட்சியளித்தார்.

திருவாவடுதுறையின் 11-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வாழ்ந்த காலம் அது. சின்னப்பட்டம் திருச்சிற்றம்பலம் தேசிகர், சன்னிதானத்துக்கு நெல்கட்டும் செவல் ராணியிடம் இருந்து திருமுக ஓலை வந்திருப்பதாகச் சொல்கிறார். ஒடுக்கம் சாமிநாத தம்பிரான் அதை வாங்கி படிக்கிறார். ‘குருமகாசன்னிதானம் அவர்களே.. நமது திருமடத்தில் நெல்கட்டும் செவல் அரண்மனையை அலங்கரிக்கும் ராமர் பாண்டியன் நான்கு வருடமாக இருக்கிறாராம். அவரை அரண்மனைக்கு அனுப்ப வேண்டும் என மகாராணி ஓலை அனுப்பியுள்ளார்’.

ஆச்சரியப்பட்ட சன்னிதானம் உடனடியாக தம்பிரானிடம், ‘திருமடத்தின் சத்திரத்தில் தங்கியிருக்கும் காஷாயம் வாங்காத துறவிகள் கூட்டத்தில் உடனடியாக விசாரியுங்கள்’ என்றார். ஓலை கொண்டு வந்த சங்கு முத்துப்பிள்ளை பாண்டியனை அடையாளம் காட்டினார். சன்னிதானத்தின் பாதங்களில் முறைப்படி விழுந்து நமஸ்கரித்த ராமர்பாண்டியன், அவர் முன்பு கைக்கட்டி வாய் மூடி நின்றார்.

‘நான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் ஆதினத்தில் இருந்தமைக்கு சன்னிதானம் அடியேனை மன்னிக்க வேண்டும்’ என மன்னிப்புக் கேட்டார்.‘மன்னிப்பா! ராஜ வாழ்க்கை வாழக்கூடிய ஒருவர், துறவு வாழ்க்கையில் இங்கு அமர்ந்து எடுபிடி வேலையெல்லாம் செய்திருக்கிறார் என்றால், நீர்.. எவ்வளவு பெரிய தத்துவ ஞானி.

ஆனாலும் ஆட்சி பொறுப்பை விட்டு துறவி பொறுப்பை ஏற்க முடியுமா..? ‘ராமர் பாண்டியரே! நீர்.. உடனே சென்று நெல்கட்டும் செவல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். மனதளவில் துறவியான அடியேனால் இனி உலக வாழ்க்கையில் எப்படி ஈடுபட முடியும்? ராமர் பாண்டியன் கண் கலங்கினார்.

எதற்கும் மனம் கலங்க வேண்டாம் ராமர் பாண்டியனே. இன்றே இப்போதே நீர் நெல்கட்டும் செவல் மன்னராகிவிட்டீர். அதுவும், திருவாவடுதுறையில் இருந்து செல்கின்ற நீர் ‘ராஜரிஷி’ என்று அழைக்கப்படுவீர். உம்மை அங்குள்ள குடிமக்கள் போற்றுவார்கள்’ என்று கூறி, மிகவும் சிறப்பான பட்டு சால்வையை எடுத்து ராமர் பாண்டியனுக்கு போர்த்தினார். அதன் பின் சங்கு முத்துப்பிள்ளை கொண்டு வந்திருந்த பல்லக்கில் ஏறி புறப்பட்டார், ராமர் பாண்டியன்.

பல்லக்கு அரண்மனையை வந்தடைந்தது. மக்கள் குதூகலம் அடைந்தனர். ராஜரிஷியாக வந்திருக்கின்ற மகராஜாவை பார்க்க ஓடிவந்தனர். ராமர் பாண்டியன், தன் கழுத்தில் உத்திராட்சம் அணிந்திருந்தார்.

சன்னிதானம் அளித்த பட்டாடையால் உடம்பைப் போர்த்தியிருந்தார். ராணி கோமதிமுத்து நாச்சியாரோ, ராஜ சின்னங்கள் அனைத்தையும், உடைவாளுடன் அவர் பாதங்களில் சமர்ப்பித்தார். ‘ராமர் பாண்டிய மகராஜா வாழ்க’ என்ற மக்கள் கோஷம் விண்ணைப் பிளந்தது. நெல்கட்டும் செவல் ராஜாவானார், ராமர் பாண்டியன்.

சில ஆண்டுகளே அவர் ராஜாவாக இருந்தார். ஆனாலும் அவரின் மனமோ ராஜாவாக இருக்க அவரை விடவில்லை. அவரின் ஆன்மிக நாட்டம் அனைவரையும் வியக்க வைத்தது. தன்னுடைய ஆட்சிக்கு உள்பட்ட பல நிலபுலன்களை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எழுதி வைத்தார். உதயமார்த்தாண்ட பூஜை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

பல கோவில் திருப்பணிகளைத் தொடர்ந்தார். தான, தர்மங்களைச் செய்தார். தன்னுடைய குடிகளும் படை வீரர்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் குறைவில்லாமல் செய்து கொடுத்தார்.

தான் ஜீவ சமாதி ஆவதற்காக, நெல்கட்டும் செவலுக்கு வடக்கே நிஷோப நதிக்கரையில் மூன்று நீர் நிலைகள் ஒன்று சேரும் இடத்தைத் தேர்வு செய்தார். நாள்தோறும் அங்கு வந்து அமர்ந்து வெகுநேரம் தவம் செய்ய ஆரம்பித்தார். ஒரு குறிப்பிட்ட நாள் வந்தது. அவரே கட்டிய சமாதியில் நிஷ்டையில் இருந்தபடியே ஜீவ சமாதி அடைந்தார்.

ஊர் மக்கள் இங்கு கோவில் அமைத்தனர். இந்தக் கோவிலில் உருவம் எதுவும் இல்லை. சமாதியில் ஆறு அடிக்கு அதிகமான உயரத்தில் ஒரு புற்று வளர்ந்திருக்கிறது. அந்த புற்றில் முகம் போன்ற அமைப்பு உள்ளது. இந்த புற்று மண் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்பது அந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

ராமர் பாண்டியன் ஜீவசமாதி உயிரோட்டம் கொண்டது. எனவேதான் இந்த புற்று மிக வேகமாக வளர்கிறது. இதன் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே புற்றில் ஈரத்துணியை நனைத்து போட்டு வளர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் முடியவில்லை. இறுதியில் ராமர் பாண்டியனிடம் விரும்பி வேண்டி தலையில் கவசம் ஒன்றை வைத்தனர். ஓரளவு புற்றின் வளர்ச்சி தடைபட்டது. ஆனால் அவர் வழங்கும் அருள் ஆசியை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை.

மடத்தில் இருந்து அரண்மனைக்கு வரும் போதே பல அற்புதங்களை செய்ய ஆரம்பித்தார் ராஜரிஷி. வழியில் பல்லக்கு தூக்கிகளுக்கு தாகம் எடுத்தது. உடனே பல்லக்கை நிறுத்த இடம் தேடினர். ஆனால், ராமர் பாண்டியனோ, ‘நீங்கள் தைரியமாகச் செல்லுங்கள். பல்லக்கு அந்தரத்தில் நிற்கும்’ என்று கூறினார். அவர்களும் பல்லக்கை அப்படியே விட்டு விட்டுச் சென்றனர்.

என்ன ஆச்சரியம்! பல்லக்கு அப்படியே அந்தரத்தில் நின்றது. பின் அவர்கள் நால்வரும் தண்ணீர் குடிக்க அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றனர். அங்கு மந்திரம் தெரிந்த பெண் ஒருத்தி நின்றாள். அவள் பல்லக்கு அந்தரத்தில் நிற்பதைப் பார்த்தாள். ‘எவரோ ஒருவர் தன் எல்லைக்குள் வந்து வித்தை காட்டுகிறாரே’ என்று நினைத்தவள் தானும் பதிலுக்கு வித்தை காட்ட ஆரம்பித்தாள்.

அதன்படி தண்ணீரை கை நீட்டி குடித்த பல்லக்கு தூக்கிகள் நால்வர் கையும், அப்படியே ஒட்டிக்கொண்டது. அதை பிரிக்க முடியவில்லை. உடனே, அவர்கள் ராமர் பாண்டியனை நோக்கி ஓடி வந்தனர். ராமர் பாண்டியன் கோபத்துடன் தனது கையில் கிடந்த கடத்தினை தூக்கி நிறுத்தி, மந்திரவாதி பெண்ணை நோக்கி தனது தவ வலிமையைக் காட்டினார்.

அப்போது சூறாவளி போன்று காற்று அடித்தது. அந்தக் காற்று அந்தப் பெண்ணைத் தரையில் நிற்கவிடாமல் தூக்கியது. இதனால் பயந்து போன அந்தப் பெண் மந்திரவாதி, ராமர் பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு, அந்த நால்வரின் கையை பிரித்து விட்டுவிட்டார்.

இதனால் ராஜரிஷி என்று திருவாவடுதுறையில் பெயர் பெற்ற ராமர் பாண்டியன், மக்கள் மத்தியிலும் பெரும் பெயர் பெற்றார். நெல்லை மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் - பனையூர் செல்லும் வழியில், நெல்கட்டும் செவல் சாலையில் நிட்சோப நதிக்கரையில் ராமர்பாண்டியன் ஜீவசமாதி ஆலயம் உள்ளது. தீராத நோய் என்று மருத்துவர்கள் கைவிட்டவர்கள் கூட, இங்கு வந்து தங்கி நோய் தீர்ந்து செல்கின்றனர்.