பிரசாதமாக மணல் சாப்பிட்ட ஸ்ரீராமானுஜர்! ஈடு இணையில்லாத பக்தி ராஜ்ஜியம்!

நாராயணனின் உருவம் எப்படி இருக்கும்? அன்பர்கள் அதாவது தன் அடியார்கள் தனக்கு என்ன உருவம் கொடுக்கிறார்களோ அதையே ஏற்பான்.


நாராயணின் பெயர் என்ன? அடியார்கள் என்ன பெயர் வைத்து அழைக்கிறார்களோ அதையே ஏற்பான். அடியார்கள் தன்னை எவ்வாறு நித்தம் நித்தம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதுபோல தானும் அவர்களை சிந்தித்துக் கொண்டே இருப்பான் ஆழியை ஏந்திய மால்.இதுதான் பொய்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரத்தின் சாரம்.

இந்த பாசுரம் அப்படியே நிகழ்வாகவே நடக்கிறதப்பா திருவரங்கத்தில்! ஆச்சர்யம் அள்ளுகிறது. ஆழ்வார் எழுதி வைத்துவிட்டு பரமபதம் போய்விட்டார். அவர் காலத்துக்குப் பின் வந்த ராமானுஜரின் வாழ்வில் இந்த பாசுரம் நிகழ்ந்தது எப்படி என்பதை, இந்த பாசுரத்துக்கு உரை எழுதும்போது பெரியாவாச்சான் பிள்ளை விளக்குகிறார். அவர் நஞ்சீயரின் திருவாக்காக இந்த சம்பவத்தை நமக்கு காட்சிப் படுத்துகிறார்.

ஒரு நாள் ராமானுஜர் திருவரங்க வீதியிலே நடந்து கொண்டிருக்கிறார். கையில் அவர் ஏந்தியிருந்த பிச்சைப் பாத்திரம். சிஷ்யர்கள் கூட வருகிறார்கள். வழக்கம்போல ஏதோ ஒரு பாசுரத்தின் அருஞ்சொற்பொருளை அழகுதமிழில் சீடர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்.அப்போது திருவரங்க வீதிகளிலே சின்னஞ்சிறுவர்கள் மணலை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

உடையவரைப் பார்த்ததும் அவர்களுக்கு கொள்ளை மகிழ்ச்சி. எப்போதுமே திருவரங்கத்தில் திரியும் வாண்டுகளை அள்ளி அணைத்து உடையவர் கொஞ்சிவிட்டுத்தான் செல்வார். இன்னார் குழந்தை என்ற பேதம் அவரிடம் கிடையாது.

அன்று அவர் பாசுரத்தில் மூழ்கியிருக்கையில், ‘உடையவரே....’ என்று ஒரு மழலைக் குரல் அவர் காதைத் தொட்டது. உடையவர் திரும்பிப் பார்த்தார். வீதியின் ஓரத்தில் சிறுவர்கள் வரிசையாக நின்றிருந்தனர்.‘நான் தான் உடையவரே கூப்பிட்டேன். இங்க வாங்களேன்’ என்றான் ஒரு மழலை. மகிழ்ச்சிப் பட்டாசாய் சிரித்தபடி அந்த மழலைப் பட்டாளத்தை நெருங்கினார் உடையவர்.

அவர், அவர்களை நெருங்கி நடக்க, ‘உடையவரே உடையவரே... கொஞ்சம் தள்ளி வாங்க. எம்பெருமான் இருக்கிறார் பாருங்க’ என்றான் ஒரு சிறுவன்.ராமானுஜர் தன் காலை அந்த இடத்தில் வைக்கப் போனவர் சுதாரித்துக் கொண்டு சற்றே தள்ளி வைத்தார்.என்ன சொல்கிறான் அந்த மழலை என்று கீழே பார்த்தால், அந்த மழலைகள் மணலில் அரங்கநாதன் படுத்துக் கிடப்பது போல வரைந்து வைத்திருக்கிறார்கள்.

அதுதான் பெருமாள் என்று வணங்கிக் கொண்டிருந்தார்கள். கூடவே, தேங்காய் மூடிகளின் கொட்டங்கச்சிகளில் ஒன்றில் தீர்த்தம், ஒன்றில் மணல் வைத்து, அந்த தீர்த்தத்தால் அந்த மணலை, தாங்கள் மணலால் செய்த மாலுக்கு படைத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னப்பா இது என்றார் ராமானுஜர்."நேத்திக்கு கோயிலுக்கு போயிருந்தோம் உடையவரே. அங்கே பெருமாளுக்கு அர்ச்சகர் இப்படிதான் பண்ணினார். கோயில் தூரமா இருக்கா, அதனால தினமும் போக முடியல. அதான் நாங்களே பெருமாளை இங்க கொண்டுவந்துட்டோம்.

கொட்டாங்கச்சியில இப்பதான் பெருமாளுக்கு சாதம் படைச்சோம். இந்தாங்க பிரசாதம்" என்றபடியே அந்த மணலை அள்ளி ராமானுஜர் கைகளில் கொடுத்தனர். இதையே அந்த பொய்கையாழ்வார் அவரது பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடியார் வைத்ததே உருவம், அடியார் வைத்ததே உணவு,. அடியார் வைத்ததே பெயர். ராமானுஜர் கண்களில் இருந்து நீர் கசிந்தது. தனது பிச்சைப் பாத்திரத்தை ஓரமாக கீழே வைத்துவிட்டு, அந்த மழலைகள் மணலில் செய்த அரங்கனை அங்கேயே கீழே விழுந்து வணங்கினார்.பின் அங்கிருந்த மழலையிடம், ‘பிரசாதம் கொடுப்பா’ என்றார்.

அவன் ராமானுஜரின் பிச்சைப் பாத்திரத்தில் அந்த மணலை எடுத்துப் போட்டான். நெகிழ்ந்து போய் அந்த மணலை சாப்பிட்டார் ராமானுஜர். இந்த கண்கொள்ளாக் காட்சியை நஞ்சீயர் திருவாக்காக நமக்கு அளித்துள்ளார் பெரியவாச்சான் பிள்ளை.

ராமானுஜரின் பக்திக்கு ஈடுண்டோ, அவரது பண்பாட்டுக்கு ஈடுண்டோ! அரங்கனை எவ்வளவு அனுபவித்திருந்தால் இப்படியெல்லாம் செய்திருப்பார் ராமானுஜர்.