டெல்லிக்கு மருமகள்! தமிழகத்துக்கு மகன்! சிங்கத்தின் தலைமையில் பலே ராமதாஸ் பிளான்!

பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் தேர்தல் கூட்டணி உறுதியாகிவிட்டது என்று செய்திகள் கசிந்திருக்கும் வேளையில், திடீரென செம்மறி ஆட்டு அறிக்கை விட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் ராமதாஸ்.


செம்மறி ஆட்டுத் தலைமையின் கீழ் இருக்கும் சிங்கமாக இருப்பதைவிட, சிங்கத்தின் தலைமையில் செம்மறி ஆடாக இருப்போம் என்று புரட்சிகரமான ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அய்யா ராமதாஸ்.

என்னதான் சொல்லவருகிறார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பேசினோம். ராமதாஸ்க்கு தி.மு.க. கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத்தில் ஆறு தொகுதிகளையாவது வெல்லவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், அதற்கு ஸ்டாலின் சரியான பதில் கொடுக்கவில்லை. ஏனென்றால் தனது கூட்டணியில் பா.ம.க.வுக்கு இடம் கொடுத்தால் சீட் மட்டும் போதாது, செலவுக்குப் பணமும் கொடுக்க வேண்டும். பணம் கொடுப்பது தி.மு.க.வுக்கு ஆகவே ஆகாது என்பதால் இருக்கும் ஆட்களை வைத்து சமாளிக்கலாம் என்று நினைக்கிறார்.

இதைவிட்டால் ராமதாஸ்க்கு உள்ள ஒரே ஒரு வாய்ப்பு அ.தி.மு.க. மட்டும்தான். அங்குதான் பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. அதனால் கூடுதலாக தொகுதியும் வாங்கலாம், தொகுதிக்கு ஏற்ப செலவுக்குப் பணமும் வாங்கலாம். இதைத் தவிர ஒரு ராஜ்யசபா சீட்டும் வாங்கலாம் என்று நினைக்கிறார். இதற்கான பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்த நிலையில்தான் திடீரென செம்மறி ஆடு, சிங்கம் என்று பேசத் தொடங்கியதற்கு பின்னேயும் சில அர்த்தம் இருக்கிறது.

அதாவது தானே போய் சேர்ந்தால் மரியாதை இருக்காது என்று நினைக்கிறார். பா.ம.க. இல்லாமல் அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க முடியாது என்பதால், தன்னைத் தேடி வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதற்காகத்தான் இப்படி பிகு செய்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ராமதாஸ் சிங்கமாக மட்டுமல்ல செம்மறி ஆடாக இருக்கவும் கவலைப்பட மாட்டார். அவர் கொடநாடு மர்மம் பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான், கூட்டணிக்கு அவர் போட்டுள்ள அச்சாரம்.

மேலும், இனிமேல் அன்புமணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். ஏனென்றால் அடுத்துவரும் இடைத் தேர்தலில் பா.ம.க. எப்படியும் 25 முதல் 30 தொகுதிகளைப் பிடிக்கவேண்டும் என்று கணக்குப் போட்டுள்ளார். அப்படி தொகுதிகளைப் பிடித்துவிட்டால், கர்நாடக குமாரசாமி பாணியில் தமிழகத்தில் அன்புமணியை முதல்வராக்கிவிடலாம் என்று கணக்குப் போடுகிறார்‘‘ என்று சொன்னார்கள்.

பலே பலே... கணக்கு நல்லாத்தான் இருக்கு!