மக்கள் மன்றத்திற்கு மீண்டும் வந்த ராஜூ மகாலிங்கம்! 1 மணி நேரம் ரஜினியுடன் ஆலோசனை!

ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மஹாலிங்கம் போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்


பல மாதங்களாக மன்றப் பணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த ராஜூ மகாலிங்கத்தை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் சமாதானம் செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினி மக்கள் மன்றம்  துவங்கியபோது ராஜூ மகாலிங்கம் மன்றத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமன பணிகளையும் அதேபோல புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளையும் செய்துவந்தார். 

   ஒவ்வொரு ஊராக சென்று ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று வந்த நிலையில் திடீரென்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ராஜு மகாலிங்கத்திற்கும்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து மற்ற பணிகளில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கும்படி ரஜினி மகாலிங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.

 இதனை அடுத்து மன்றப்பணிகளில் இருந்து ராஜூ மகாலிங்கம் சுத்தமாக ஒதுங்கினார். இந்த நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் ராஜு மகாலிங்கத்தை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார். இன்று காலை  போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு வந்த ராஜூ மகாலிங்கம்   பின்னர் ஒரு மணி நேரம் ஆலோசனைக்குப் பிறகு ரஜினி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். 

   இந்த சந்திப்பின் போது ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை மட்டுமன்றி ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிப்பதற்கான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை லைக்கா தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

  இதனிடைய கடந்த வாரம் ரஜினி மக்கள் மன்ற அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து இளவரசன் நீக்கப்பட்டார். மேலும் பொறுப்புகளை கவனிக்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலினை ரஜினி நியமித்தார். ஆனால் அவரால் அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைக்க முடியவில்லை என்கிறார்கள். இதனால் ரஜினி சத்தியநாராயணாவை அதாவது தனது ரசிகர் மன்றத்தின் ஆரம்ப கால தலைவரை அழைத்து பேசியுள்ளார்.

   வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணத்தால் சத்தியநாராயணாவாலும் மன்றப்பணிகளை முழு வீச்சில் கவனிக்க முடியாது என்பதை ரஜினி உணர்ந்து கொண்டதாக சொல்கிறார்கள். எனவே தான் கடந்த வருடம் சுறுசுறுப்பாக இயங்கி ராஜூ மகாலிங்கத்தை  ரஜினி மீண்டும் அழைத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அவருக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தான் தெரியும்.