கூகுள் தேடுதலிலும் நம்பர் ஒன் தலைவர் தான்! தல –தளபதி லிஸ்ட்லயே இல்லியாம்!

2018ம் ஆண்டு இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.ஓ முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.


ஆண்டு தோறும் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் அதிக முறை தேடப்பட்ட நபர், அதிகம் தேடப்பட்ட நடிகர், அதிகம் தேடப்பட்ட நடிகை, அதிகம் தேடப்பட்ட அரசியல் தலைவர், அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர், அதிகம் தேடப்பட்ட செய்தி,அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

   அந்த வகையில் 2018ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரையுலக பிரபலமாக ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மாணிக்க மலராய பூவி பாடலில் ஒரே ஒரு கண் அசைவு மூலம் உலகப் புகழ்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர் அறிவிக்கப்பட்டார். இந்த வரிசையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படத்தின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்களில் ஒன்பது படங்கள் இந்தி.

   ஒரே ஒரு தமிழ்ப்படம் மட்டும் தான் கூகுளின் அதிகம் தேடப்பட்ட திரைப்பட பட்டியலில் இடம்பெற்றது. அதுவும் பட்டியலில் முதல் இடத்தையும் அந்த திரைப்படம் கைப்பற்றியுள்ளது. அந்த படம், வேறு எதுவும் இல்லை, சூப்பர் ஸ்டார் ரஜினி –அக்சய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கி லைக்கா சுபாஸ்கரன் தயாரித்த 2.ஓ தான். இந்திய அளவில் 2.ஓ திரைப்படத்தை தான் ரசிகர்கள் கூகுளில் அதிக முறை தேடியுள்ளனர்.   அதாவது 2.ஓ திரைப்படம் எந்த திரையரங்கில் ஓடுகிறது, எந்த காட்சியில் டிக்கெட் உள்ளது என்கிற விவரத்தை அறிய அதிக முறை தேடியுள்ளனர். மேலும் 2.ஓ திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற தகவலை அறியவும் இந்த ஆண்டு துவக்கம் முதலே ரசிகர்கள் கூகுள் உதவியை நாடியுள்ளனர். மேலும் 2.ஓ படத்தின் பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்ளவும் கூகுளை ரசிகர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

   2.ஓ தவிர ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் ஷெராப் நடித்த பாகி 2 திரைப்படத்தையும் ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். சல்மான் கானின் ரேஸ் 3, ரன்பீர் கபூரின் சஞ்சு, தீபிகா படுகோனின் பத்மாவத் ஆகிய படங்களையும் ரசிகர்கள் அதிகம் தேடியுள்ளனர். இந்த பட்டியலில் வேறு எந்த தமிழ் படமும் இடம்பெறவில்லை. சர்கார் படம் தீபாவளிக்கு வெளியான நிலையிலும் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் இல்லை.

   இதே போல் அஜித்தின் விஸ்வாசம் படத்தையும் ரசிகர்கள் அதிக அளவு தேடவில்லை. 2.ஓ படத்துடன் திரையில் மட்டும் அல்லாமல் கூகுளிலும் போட்டியிட தமிழகத்தில் எந்த நடிகரும் இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களை விட ரஜினியின் படம் கூகுளில் அதிக முறை தேடப்பட்டுள்ளது.