ரஜினி மக்கள் மன்றத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அதிகாரத்துடன் இருந்த மூன்று பேரை ரஜினி ஓரம்கட்டியுள்ளார்.
முக்கிய நிர்வாகிகள் 3 பேரை விரட்டிய ரஜினி! மக்கள் மன்றத்தில் அதிரடி மாற்றம்!

கடந்த ஆண்டு அரசியல் பிரவேசத்தை துவக்கிய ரஜினி தனது நீண்ட
கால நண்பர் சுதாகரை மக்கள் மன்றத்திற்கு பொறுப்பாளராக நியமித்தார். அதன் பிறகு சிறிது
நாட்கள் கழித்து லைக்கா நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்த ராஜூ மகாலிங்கத்தை மக்கள்
மன்றத்தின் செயலாளர் ஆக்கினார். அதன் பிறகு நிர்வாகிகள் நேர்காணல் நடைபெற்றது.
அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் ராஜூ மகாலிங்கம்
மற்றும் சுதாகர் நேர்காணம் செய்து பொறுப்பாளர்களை அறிவித்தனர். இந்த விவகாரத்தில் ராஜூ
மகாலிங்கம் மீது புகார்கள் எழுந்தன. ரசிகர் மன்றத்தின் நீண்ட நாள் உறுப்பினர்களை ஒதுக்கிவிட்டு
பணம் இருப்பவர்களை தான் நிர்வாகிகளாக பரிந்துரைப்பதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதனை அடுத்து ராஜூ
மகாலிங்கத்தை மன்ற செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டார்.
பின்னர் ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் பக்கம் ராஜூ மகாலிங்கத்தை பார்க்கவே முடியவில்லை.
ராஜூ மகாலிங்கம் சென்ற பிறகு இளவரசன் என்பவரை ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்புச் செயலாளர்
ஆக்கினார்.
மாவட்ட வாரியாக மோசமாக
செயல்படும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியை இளவரசன்
செய்து வந்தார். மேலும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று உறுப்பினர் சேர்க்கையையும் இளவரசன்
தீவிரப்படுத்தினார். இதனால் இளவரசன் மக்கள் மன்றத்தின் அதிகாரமிக்க நபராக மாறினார்.
இளவரசன் தனது பெயரில்
தனியாக அறிக்கை வெளியிடும் அளவிற்கு ரஜினியின் மக்கள் மன்றத்தில் செல்வாக்குடன் இருந்தார்.
இந்த நிலையில் இளவரசன் மீதும் புகார்கள் எழுந்தன. அதாவது நிர்வாகிகளை மதிப்பதில்லை,
நிர்வாகிகளை மோசமாக பேசுகிறார், பெண் நிர்வாகிகளை ஒருமையில் அழைக்கிறார் என இளவரசன்
மீது புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் விழுப்புரம்
மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சிலரை இளவரசன் அதிரடியாக நீக்கினார். இந்த
விவகாரம் அந்த இரண்டு மாவட்டங்களோடு நிற்காமல் மற்ற மாவட்டங்களிலும் பிரச்சனை ஆனது.
இளவரசனுக்கு எதிராக புகார்கள் குவிந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர்
ரஜினி வீட்டுக்கே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை
ரஜினியை நேரில் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் மக்கள் மன்றத்தில் மீண்டும் சேர்த்துக்
கொள்ளப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு
பிறகு இளவரசனுக்கு மக்கள் மன்றத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது உறுப்பினர் சேர்க்கை, நீக்க விவகாரத்தில் இளவரசன் தலையீடு சுத்தமாக இல்லை என்று
சொல்லப்படுகிறது. மேலும் ராஜூ மகாலிங்கத்தை ஒதுக்கி வைத்தது போல இளவரசனையும் ரஜினி
ஒதுக்கிவிட்டார். இதனால் மீண்டும் மக்கள் மன்ற பணிகளை சுதாகர் மட்டுமே கவனித்து வருகிறார்.
இதே போல் மக்கள்
மன்றத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த தூத்துக்குடி ஸ்டாலின், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி
ராஜசேகர் ஆகியோரும் தற்போது ராகவேந்திரா மண்டபம் பக்கம் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது.
இதற்கும் ரஜினி அவர்களை ஓரம்கட்டியது தான் காரணம் என்று கூறப்படுகிறது. புத்தாண்டு
பிறந்துள்ள நிலையில் மேலும் சிலருக்கு அதிகாரம் கொடுத்து டிரயல் பார்க்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக
கூறப்படுகிறது.