என் வழி தனி வழி! மோடிக்கு ரஜினி அனுப்பிய ஸ்ட்ராங் மெசேஜ்!

அரசியல் கட்சி துவங்கப்பட்ட பிறகு தன் வழி தனி வழியாகவே இருக்கும் என்று நடிகர் ரஜினி பா.ஜ.கவிற்கு ஸ்ட்ராங் மெசேஜ் அனுப்பியுள்ளார்.


நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.கவிற்கு அரசியல் ரீதியாக பலத்த அடி கிடைத்துள்ளது. ஆறுதலாக கூறிக் கொள்ளும் வகையில் கூட எந்த மாநிலத்திலும் பா.ஜ.கவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. மிசோரம் தொடங்கி சத்தீஸ்கர் வழியாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் கதறும் வகையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

   சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என மூன்று மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை பறிகொடுத்துள்ளது. காங்கிரஸ் இல்லாத தேசம் என்கிற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க தனது ஆட்சிக்காலத்தின் இறுதி பகுதியில் மூன்று முக்கிய மாநிலங்களை காங்கிரசிடம் கொடுத்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் இல்லாத பாரதம் எனும் பா.ஜ.கவின் முழக்கம் வெற்று கோஷமாகிப் போனது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 5 மாநில தேர்தலில் பா.ஜ.கவிற்கு கிடைத்த அடி காங்கிரசுக்கு பூஸ்ட் தரும் வகையில் அமைந்துள்ளது.   இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ரஜினியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினி, பா.ஜ.க செல்வாக்கை இழந்துள்ளது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறினார். மேலும் 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார். மோடி பிரச்சாரம் செய்தும் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  செல்வாக்கை இழந்தது தான் தோல்விக்கு காரணம் என்று பதில் அளித்துவிட்டு ரஜினி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக போயஸ் கார்டனில் ரஜினி செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது- ஆனால் 5 மாநில தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் ரஜினி செய்தியாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் பரவின.

   இதனை தொடர்ந்தே ரஜினி விமான நிலையத்தில் வைத்துசெய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் முடிவுகள் குறித்து வழக்கம் போல் பதில் அளிக்காமல் பா.ஜ.க செல்வாக்கை இழந்துவிட்டது என்று ரஜினி கூறியிருப்பது அந்த கட்சிக்கு அரசியல் ரீதியாக ரஜினி கூறியுள்ள பதிலாகவே பார்க்கப்படுகிறது. பா.ஜ.க தான் ரஜினியை இயக்குகிறது, பா.ஜ.க கூட்டணியில் தான் ரஜினி தேர்தலில் களம் இறங்குவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.   ஆனால் சினிமாவில் மட்டும் அல்ல அரசியலிலும் தன் வழி தனி வழி தான் என்பதை வெளிப்படையாக கூறாமால் பா.ஜ.க செல்வாக்கை இழந்துவிட்டதாக கூறியுள்ளார் ரஜினி. இதன் மூலம் பா.ஜ.கவுடன் கூட்டணி என்கிற பேச்சையும், பா.ஜ.க தான் ரஜினியை இயக்குகிறது என்கிற வதந்தியையும் ரஜினி சுக்குநூறாக்கியுள்ளார். மேலும் அதிரடியாக கருத்தை கூறி விரைவில் அரசியல் களம் காண இருப்பதையும் சொல்லாமல் சொல்லியுள்ளார் ரஜினி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.