ரஜினியுடன் சேர்ந்தால் 25 - உளவுத் துறை ரிப்போர்ட் உண்மையா?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி வைத்தால் 25 தொகுதிகளை அள்ளிவிடலாம் என்று மத்திய உளவுத் துறை மோடியிடம் அறிக்கை கொடுத்திருப்பதாக சொல்லப்படுவது உண்மையா?


புலி வாலைப் பிடித்த கதையாக, அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்துவிட்டு இன்னமும் கட்சிதொடங்க விருப்பமில்லாமல் நாள் கடத்திவருகிறார் ரஜினிகாந்த். அவ்வப்போது உடல் நிலையும் அவரை பாடாய் படுத்திவருகிறது. அதோடு மத்திய அரசு நெருக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மோடியின் தூதராக நிதின் கட்கரி அவ்வப்போது ரஜினியை தொடர்புகொண்டு அரசியல் அப்டேட் செய்து வருகிறார். பி.ஜேபி. ஆபத்தான கட்சி என்ற ரீதியில் ரஜினி கொடுத்த பேட்டையை வாபஸ் பெற வைத்ததும் இவர்தான். நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தால் ஜனவரியில் கட்சியை அறிவிக்க ரஜினி தயாராக இருக்கிறார். ஆனால், அதற்கான வாய்ப்பு தென்படவில்லை. ஏனென்றால் மத்திய அரசைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதுதான் நல்லது என விரும்புகிறது. 

இந்த குழப்பமான நேரத்தில்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியுடன் மட்டும் பா.ஜ.க. கூட்டணி வைத்தால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 25 தொகுதிகளை அள்ளிவிடலாம் என்று ஒரு சர்வே வெளியாகியுள்ளது.. இதுகுறித்து உளவுத் துறை வட்டாரத்தில் விசாரணை நடத்தினோம்.

ரஜினிக்கு இருக்கும் மக்கள் ஆதரவு குறித்துத்தான் சர்வே எடுத்துத்தரும்படி எங்களுக்கு உத்தரவு வந்தது. அதன்படி 15 தொகுதிகளில் ரஜினியின் குரலுக்கு மதிப்பு இருக்கும். அந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மாணிக்கும் அளவுக்கு ரஜினியின் வாக்கு வங்கி இருக்கும் என்று தெரிவித்து இருந்தோம். இதைத்தான் அதிகப்படுத்தி பா.ஜ.க.வும் ரஜினியும் சேர்ந்தால் 25 இடங்களில் வெற்றி என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இது ரஜினிக்கு வீசப்படும் வலை. இத்தனை தொகுதிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது தெரியவந்தால், அவர் விரைது கட்சி ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார் என்று பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அரசியலில் இறங்கிவிட்டால் பா.ஜ.க.வைத் தவிர ரஜினிக்கு வேறு வாய்ப்பு கிடையாது என்பதால் எப்படியாவது அரசியலில் இழுத்துவிட்டு தமிழகத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற ஆசைப்படுகிறது.

இந்த தூண்டிலில் ரஜினி சிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவர்து உடல்நிலை சீரடைய குறைந்தது ஆறு மாத ஓய்வு தேவை என்று சொல்லப்படுகிறது. அதுவரை அமைதியாக இருந்து உடலை சரிசெய்த பிற்கு அரசியல் பற்றி ரஜினி யோசிக்கலாம் என்று தெரிவித்தனர்.

என்னமா திரைக்கதை எழுதுறாங்கப்பா...