செத்தும் கொடுத்தார் தேவகி! மரணித்தும் 5 பேருக்கு வாழ்வளித்த ராஜபாளைய அதிசய பெண்மணி!

மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் ஐந்து பேரை வாழ வைத்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் இளம் பெண் தேவகி. இவர் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். விழா முடிந்து திரும்பி வரும் வழியில் சாத்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று தேவகி சென்ற கார் மீது மோதியது. ,

இதில் தேவகிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.. ஆனால் மருத்துவர்கள் கைவிரித்து விடவே மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் என்ற தனியார் மருத்துவமனைக்கு தேவகி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது கணவர் கிருஷ்ணமூர்த்திக்கு மருத்துவர்கள் நிலைமையை எடுத்துரைத்தனர். தேவகியின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பலரது வாழ்வில் ஒளி ஏற்றலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைக் கேட்ட கிருஷ்ணமூர்த்தியும் ஒப்புக்கொண்டார்.

வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் தேவகியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தேவகியின் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை அதே மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் இருவருக்கு பொருத்தப்பட்டன. அவரது மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலியில் உள்ள சிறுநீரக மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரு கண்கள் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப் பட்டது. அங்கு கண் தேவைப்படுவோருக்கு தேவகியின் கண்கள் பொருத்தப்படும். 

உடலுறுப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு கிருஷ்ணமூர்த்தி எடுத்த முடிவால் தற்போது பலருக்கு வாழ்வு கிடைத்துள்ளது. தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்ற போதிலும், பிறருக்கு வாழ்வு அளித்து அதன் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற காதலுடன் கண்ணீர் வடிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இதன் மூலம் செத்தும் கொடுத்தார் தேவகி என்பது உறுதியாகியுள்ளது. மேலும் தான் மறைந்த பிறகு ஐந்து பேருக்கு வாழ்வு அளித்த அதிசயத்தையும் நிகழ்த்திவிட்டு சென்றுள்ளார் தேவகி.