உலக கோப்பை! இந்தியா – பாக்., ஆட்டம் நடைபெறுவதும் சந்தேகம்! ஏன் தெரியுமா?

உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் லீக் ஆட்டம் நடைபெறுவதும் சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


மிகச்சிறப்பாக துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட்போட்டிகள் மழை காரணமாக பாழாகி வருகிறது. இதுவரை 18 ஆட்டங்கள் நடைபெற்று இருக்க வேண்டிய நிலையில் மழை காரணமாக 4 ஆட்டங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.


உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டது இந்த ஆண்டு தான். அந்த அளவிற்கு மழையால் உலக கோப்பைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் இந்திய ரசிகர்களைத்தான் அதிகம் கவலை அடைய வைத்தது.


ஏனென்றால் கடந்த வியாழன்று பலம் வாய்ந்த நியுசிலாந்துடன் இந்திய அணி மோதுவதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பலம் வாய்ந்த நியுசிலாந்திற்கு எதிராக இந்திய அணி எப்படி விளையாடப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

 

இந்த நிலையில் வரும் ஞாயிறன்று இந்திய அணி உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டது. இந்த நிலையில் போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் ஞாயிறன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.


அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மான்செஸ்டர் பகுதியில் லேசான மழை இருக்கும். ஆனால் பிற்பகல் 3 மணி முதல் மறுநாள் காலை 1.30 மணி வரை மான்செஸ்டரில் மழை இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதாவது போட்டி துவங்கும் 3 மணிக்கு ஆரம்பமாகும் மழை நள்ளிரவு வரை பொழியும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதனால் நியுசிலாந்துக்கு எதிரான போட்டியை போலவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியும் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.