18வது கிராண்ட் சிலாம் பட்டம்! 12வது பிரஞ்ச் ஓபன் கோப்பை! வரலாறு படைத்தார் நடால்!

பிரஞ்ச் ஓபன் பட்டத்தை 12வது முறையாக வென்றுள்ளதுடன் கிராண்ட் சிலாம் பட்டத்தை 18வது முறையாக வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்துள்ளார்.

பெரும் எதிர்பாப்புகளுக்கு மத்தியில் ஸ்பெயின் வீரரும் உலகின் முன்னணி ஆட்டக்காரருமான ரஃபேல் நடால் ஆஸ்திரியாவின் இளம் வீரர் டோமினிக் தீமை எதிர்கொண்டார். இந்த போட்டியில் வென்றால் உலகில் 12 முறை பிரஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவர் என்கிற சாதனையை நடால் படைப்பார்.

அதே சமயம் நடாலை வீழ்த்தி டோமினிக் தீம் முதல் கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்வார். இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த போட்டியில் நடால் - தீம் களம் இறங்கினர்.

துவக்கம் முதலே போட்டியில் நடால் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை நடால் 6க்கு மூன்று என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டில் தீம் அதிரடி காட்டினார். கடும் போராட்டத்திற்கு பிறகு 7க்கு ஐந்து என்ற கணக்கில் தீம் 2வது செட்டை தனதாக்கினார்.

இதன் பிறகு தீம் நடாலின் ஆட்டத்திற்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதிரடியாக ஆடிய நடால் அடுத்த இரண்டு செட்களையும் ஆறுக்கு ஒன்று ஆறுக்கு ஒன்று என கைப்பற்றி பிரஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.

இது நடால் பெறும் 12வது பிரஞ்ச் ஓபன் பட்டமாகும். இதே போல் அவரது கிராண்ட் சிலாம் பட்டங்களின் எண்ணிக்கையும் 18ஆக உயர்ந்துள்ளது.