ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் ரூ.1000 நிவாரண உதவி..! எடப்பாடி அறிவிப்பு..! யார் யாருக்கு தெரியுமா?

ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரிசி ரேசன்கார்டுதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் -  கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

இதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்கும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.