எந்தத் திட்டத்தில் பணம் போட்டால் நல்ல வட்டி கிடைக்கும்..? தெளிவான பதில் உள்ளே!

ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் பிபிஎஃப் சேமிப்பு திட்டங்களில் அதிகப்படியான சலுகைகள் வழங்குவது எந்த திட்டம் என்று விவரிக்கிறது இந்த கட்டுரை.


நிரந்தர வைப்புத் திட்டத்தை விட வருங்கால வைப்பு நிதியில் பல்வேறு வகையான சலுகைகள் கிடைப்பதன் காரணமாக. வங்கி சார்ந்த சேமிப்பாளர்கள் மத்தியில் பிபிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் முதலீடு அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு நூற்றாண்டாக இந்திய மக்களின் முதலீட்டு பயணம் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. தபால் அலுவலக சேமிப்பு தொடங்கி வங்கிகள் சார்ந்த நிரந்தர வைப்பு நிதி என தற்போது கார்ப்பரேட் பாண்டுகள் பரஸ்பர நிதி மற்றும் பங்குச் சந்தை என பரந்து விரிந்துள்ளது. 

அதுமட்டுமின்றி தங்கம் தொடங்கி நிலங்கள் வரை மக்களின் முதலீட்டு சாதனங்கள் புதிய புதிய தொழில்நுட்பங்களில் பரந்து விரிந்துள்ளது. வங்கி சார்ந்த நிரந்தர வைப்பு நிதியில் போதுமான சிறப்பம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும். எளிதில் பணமாக்கிக் கொள்ளும் வசதிகள் உள்ளதால். கிராமம் தொடங்கி நகரம் வரையிலும். குறைந்த வருவாய் பிரிவினர் தொடங்கி நடுத்தர மற்றும் உயர்தர மக்கள் வரையிலும் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்து வருகின்றனர்.  

ஆனாலும் சமீப காலமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின் படி நிரந்தர வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்துள்ளது. அதற்கு மாற்றாக பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் களமிறங்கி வருகின்றனர். ஆனாலும், மூத்த குடிமக்கள் மற்றும் ஆபத்தில்லாத முதலீடுகளை விரும்பு முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். 

வங்கிகள் சார்ந்த வட்டிகளை விட அதிகப்படியான வட்டியும் வரிச்சலுகையும் ஒருசேர கவர்ந்திழுக்கிறது இந்த திட்டம். நிரந்தர வைப்பு நிதிக்கும் வருங்கால வைப்பு நிதிக்கும் முறையே 1 அல்லது 2 சதவிகித வட்டி விகிதங்கள் வித்தியாசப்பட்டாலும். நீண்ட கால நோக்கில் செய்யப்படும் சேமிப்புகள் சுமார் 50 சதவிகித லாபத்தை ஈட்டித் தருகின்றன. 

உதாரணமாக 2 சதவிகித வட்டி வித்தியாசத்தில் 20 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில் சுமார் 40 சதவிகித உபரி வட்டியைப் பெறுகிறது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். மேலும் பொது வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால். இன்னமும் இந்த திட்டத்தில் அதிகப்படியான சேமிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிபிஎஃப் எனப்படும் பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதி பற்றிய சில தகவல்கள். பிபிஎஃப் கணக்கில் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 500 ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை சேமிக்கும் வகையில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிபிஎஃப் கணக்கில் ஒருவர் வருட அல்லது மாத தவணைகள் என அவரவர் வசதிக்கேற்ப முதலீடு செய்யலாம்.

பிபிஎஃப் திரும்பப் பெறும் விதிகளின்படி, முதிர்ச்சியடைந்த பின்னரே முழுத்தொகையும் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. ஆனால், 7 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு அதற்கடுத்த ஒவ்வொரு ஆண்டும். ஒரு பகுதி தொகை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

பொது வருங்கால வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டிக்கு முழுமையாக வரி விலக்கு அளிப்பதுடன். வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரையிலான முதலீட்டு தொகைக்கு வரி விலக்குகளுக்கு அளிக்கப்படுகிறது.

15 வருடங்கள் லாக் இன் காலம் என்பதால், பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட காலத்திற்கான கவர்ச்சிகரமான முதலீட்டு நிதி இலக்கு ஆகும். மேலும் ஆண்டுதோறும் வட்டி விகிதம் கூட்டப்படுவதால், இதன் வருமானம் வங்கி எஃப்.டி.க்களை விட அதிகமாகிறது.

மேலும் மக்களின் முதலீட்டு விருப்பத்தை பூர்த்தியடையச் செய்யும் விதமாக இந்த திட்டத்தில் சில அம்சங்கள் உள்ளன. ஓய்வூதிய திட்டமிடுதல். முதலீட்டிற்கான நீண்ட கால வட்டி விகிதங்கள், வரி இல்லாத வருமானம், ஆண்டுதோறும் அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் மூலதன பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்குவதால், பிபிஎஃப்பில் முதலீடு செய்வது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு உள்ளதால். தபால் நிலையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளில் இந்த திட்டத்தை தொடங்க வசதிகள் உள்ளன. மேலும் ஆன்லைன் மூலமாகவும் பிபிஎஃப் கணக்கையும் திறக்க வசதிகள் உள்ளன.

உதாரணமாக பிபிஎஃப் திட்டத்தில் 8 சதவீத வட்டி விகிதத்தில் மாதம் 10,000 ரூபாய் என. தொடர்ந்து 15 வருடங்கள் முதலீடு செய்யும்பட்சத்தில். சுமார் 35 லட்சம் ரூபாயை முதிர்வு தொகையாக பெற முடியும். அரசு கட்டுப்பாட்டிற்குள் வரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக இது உள்ளதால் முதலீடுகள் பாதுகாப்பானது என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

இதே காலகட்டத்தில் வங்கிகள் வழங்கும் நிரந்தர வைப்பு நிதியின் முதிர்வுத்தொகை.பொது வருங்கால வைப்பு நிதியை விட . 2 சதவிகித குறைந்த முதிர்வு தொகையை மட்டுமே வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

மணியன் கலியமூர்த்தி