பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை! சிலிர்க்க வைக்கும் வரலாறு!

பூரி: ஒடிசா மாநிலம், பூரி கடற்கரை நகரில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் உள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் நடைபெறும் ஜெகந்நாதர் ரத யாத்திரை, உலகப் பிரசித்திப் பெற்றதாகும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

பூரி ஜெகநாதர் திருவிழாவில், 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வார்கள். குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான 9 நாட்கள் ரத யாத்திரை கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி தொடங்கியது. ஜெகந்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்திரா ஆகியோர் வெவ்வேறு ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 9 நாட்கள்  நடைபெற்ற இந்த ரத யாத்திரை நேற்று நிறைவடைந்தது.  ஊர்வலம் முடிந்து ரதங்கள் கோயிலை வந்தடைந்தன.

அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் இந்த நிறைவு விழாவில் கலந்து  கொண்டனர். பூரி திவ்யா சிங்கா தேபின் கஜபதி ராஜா சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து ரதங்கள் நிற்கும் இடத்தை தங்க துடைப்பத்தால் சுத்தப்படுத்திய பின் மலர்கள் தூவப்பட்டு, வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டது.  பின்னர் ரதங்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

தல வரலாறு

பூரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு நாள் ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது.

அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை.

அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை.

அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.