மக்களவை தேர்தலில் பிரபல அரசியல் கட்சியின் வேட்பாளரான 2 இளம் நடிகைகள்!

நடிகைகளான மிமி சக்ரபர்த்தி, நஸ்ரத் ஜகான் ஆகியோருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்புமான விமர்சனங்கள் எழுந்துள்ளன


நடிகைகள் இருவரும் தங்கள் நடிப்பு மற்றும் நடனத் திறமைகளால் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், அவர்களை வேட்பாளர்களாக ஏற்க மறுத்து சமூக வலைதளங்களில் கடும் கண்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திரினாமூல் காங்கிரஸ் சார்பில் மிமி சக்ரபர்த்திக்கு கொல்கத்தாவின் ஜாதவ்பூர் தொகுதியிலும் நஸ்ரத் ஜகானுக்கு  வடக்கு 24-வது பர்கானா மாவட்டம் பசீரத் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மீம்ஸ், நகைச்சுவை மற்றும் நக்கல் பதிவுகள் களைகட்டி வருகின்றன. 

வேட்பாளர்கள் அறிவிப்புக்குப் பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கட்சியில் 41 சதவீதம் பேர் பெண் வேட்பாளர்கள் என்பதில் பெருமைப்படுவதாக பதிவிட்டிருந்தார். அதனை நஸ்ராத் ஜகான் ரீ ட்வீட் செய்திருந்தார். அதனை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் லைக் செய்த நிலையில் 400க்கும் மேற்பட்டோர் ரீ ட்வீட் செய்திருந்தனர். 

மிமி சக்ரபர்த்தியையும் இணையதளத்தில் பலர் வாழ்த்திய நிலையில் பலர் அவருக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தனர். எனினும் அவர் அரசியலில் இருந்து விலகி நல்ல நடிகையாகத் தொடர வேண்டும் என கருத்து தெரிவிக்காதவர்களும் இல்லை நடிகைகளை களமிறக்கும் மம்தா பானர்ஜியின் முடிவு குறித்து பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சோம்நாத் சட்டர்ஜி, முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிட்ட ஜாதவ்பூர் தொகுதியில் மிமி சக்ரபர்த்தி நிறுத்தப்படுவதன் மூலம் அந்தத் தொகுதியின் மரியாதை கெட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. 

இரு நடிகைகளின்  ஆபாச நடனங்களை வெளியிட்டும் மம்தா பானர்ஜியின் தேர்வு குறை கூறப்பட்டுள்ளது. 'மூம்தா அக்கா' வேட்பாளர்களை தேர்வு செய்ய தனது அற்புதமான அறிவை பயன்படுத்தியிருப்பதாகவும் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளின் சியர் கேர்ள்ஸ் தேர்தலுக்கு உகந்தவர்கள் அல்ல என்றும் விமர்சனம் செய்யபட்டுள்ளது.