தாயை கட்டையால் அடித்து கொன்ற சம்பவத்தில் மகனை காவல்துறையினர் கைது செய்திருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்து வைத்த தாயை அடித்தே கொலை செய்த விபரீத மகன்! தந்தை உயிருக்கு போராட்டம்! திருச்சி பகீர்!

திருச்சியில் பொன்மலை கணேசபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட 9-வது தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 55. இவர் அதே பகுதியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பாப்பாத்தி. வீட்டிற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பாப்பாத்தி பணியாற்றி வந்தார். இத்தம்பதியினருக்கு பிரகாஷ் என்ற 30 வயது மகன் உள்ளார். 6 மாதங்களுக்கு முன்னர் பிரகாஷுக்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
நேற்று பிரகாஷ் தன் மனைவியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றார். மனைவியை விட்டுவிட்டு இன்று காலை பிரகாஷ் தனியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். ஆறுமுகமும், பாப்பாத்தியும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். மகன் வரும் சத்தத்தைக் கேட்ட பாப்பாத்தி கதவை திறந்துவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
வீட்டின் முன்பகுதியில் வைத்திருந்த உடற்பயிற்சி செய்யும் தம்பிள்ஸை எடுத்து பிரகாஷ் தன் தந்தையான ஆறுமுகத்தின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். வழியில் அலறிய ஆறுமுகத்தின் சத்தத்தை கேட்டு பாப்பாத்தி கழிவறையிலிருந்து வெளியே வந்து அதிர்ச்சியுடன் மகனிடம் சண்டை போட்டு கொண்டிருந்தார். அதே தம்பிள்ஸை உபயோகித்து பிரகாஷ் தன் தாயின் தலையிலும் ஓங்கி அடித்துள்ளார். சம்பவ இடத்திலேயே பாப்பாத்தி மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அதிவேகத்தில் பிரகாஷ் சென்றுகொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். விசாரணை மேற்கொண்டதில் தன் பெற்றோர் இருவரையும் அடித்து கொன்றதாக பிரகாஷ் அவர்களிடம் கூறியுள்ளார்.
உடனடியாக பிரகாஷ் அழைத்துக்கொண்டு காவல்துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை மீட்டு அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் ஆறுமுகத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்து கிடந்த பாப்பாத்தியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷை சிறையில் அடைத்தனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில், பிரகாஷுக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை என்பதும், கடந்த 15 நாட்களாக ஏதோ மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.