யாருக்கு சேர்மன் பதவி? பஞ்சாயத்து செய்த ஸ்டாலின் மனைவி துர்கா வீடு முன்பு திரண்ட திமுகவினர்! பதறிய மாவட்டச் செயலாளர்!

ஒன்றிய தலைவர் பதவி வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி திமுகவினர் துர்கா ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்குட்[பட்டது திருவெண்காடு கிராமம். இங்கு துர்கா ஸ்டாலின் வீடு உள்ளது. சீர்காழி ஒன்றிய தலைவர் பதவி வழங்குவதில் துர்கா ஸ்டாலின் ஒருவருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக கூறி திமுகவினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அதே பகுதியை சேர்ந்த திமுக பொறுப்பாளர்கள் உட்கட்சி பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என சொல்லி அவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டனர்.

என்னதான் பிரச்சனை என்று பார்க்கப் போனால், நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத் தலைவர் பதவிக்க 3 பேர் இடையே போட்டி நிலவுகிறது. பூம்புகார் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி மனைவி மதுமிதா, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன் மனைவி கமலஜோதி, சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பிரபாகரன் மனைவி உஷாநந்தினி ஆகியோர்தான் போட்டியாளர்கள்.

இதில், தேவேந்திரன், துர்கா ஸ்டாலினின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இவர் தனிப்பட்ட முறையில் துர்கா ஸ்டாலினைச் சந்தித்து, ஒன்றிய தலைவர் பதவியை தனது மனைவிக்கு வழங்கும்படி கேட்டதாகவும், அவரும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விஷயம் தீயாய் பரவ எங்கே பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் பூம்புகாரைச் சேர்ந்த ரவியின் ஆதரவாளர்களும், அந்தக் கிராம மக்களும், சுமார் 300 -க்கும் மேற்பட்டவர்கள் திருவெண்காட்டில் உள்ள துர்கா ஸ்டாலின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.