சொத்துக்காக தம்பி மனைவியை விதவையாக்கிய விஜய் ரசிகர் மன்ற தலைவர்! தூத்துக்குடி பயங்கரம்!

தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்றத் தலைவர் பில்லா ஜெகன், தனது தம்பி சாம்சனை சொத்து தகராறுக்காக சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாநகர பகுதியில் வசித்து வருபவர் பில்லா ஜெகன். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளராகவும் மற்றும் தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இவருக்கு சிம்சன் எனும் உடன் பிறந்த தம்பி இருக்கிறார்.

பில்லா ஜெகனுக்கும் சிம்சனுக்கும் இடையே தொடர் சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அடிக்கடி இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் இவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் தீவிரமாகி மோதலுக்கு சென்றுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தன்வசம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எதிர்பாராத நேரத்தில் சிம்சனை சுட, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சிம்சன்.

அங்கிருந்து உடனடியாக தலைமறைவாகிவிட்டார் பில்லா ஜெகன். இச்சம்பவம் அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சிம்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பில்லா ஜெகன் குறித்து அனைவரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் பிடிபடுவார் எனவும் போலீசார் தெரிவித்தனர். 

சொத்துக்காக அண்ணன் தம்பி இப்படி அடித்துக்கொண்டு கொலையில் முடிந்த சம்பவம் தூத்துக்குடி மக்களே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.