அம்மாவுக்கு கொரோனானு கூட்டிட்டு போய்டாங்க..! அப்பா செத்து சடலமா வீட்ல் கிடக்குறாரு..! அடக்கம் செய்யத் தெரியாமல் 16 மணி நேரமாக அல்லாடிய 11 வயது மகன்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காரணத்தால் வீட்டில் உடல்நிலை சரியில்லாத இருந்த நபர் ஒருவர் சரியாக மருந்து எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக மாறி உள்ளது. இதனால் சாதாரண அடித்தட்டு மக்கள் முதல் இந்த பெரிய பணக்காரர்கள் வரை பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அடித்தட்டு மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கே பெரும் துயரம் அடைந்து வருகின்றனர். இப்படியாக தங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையும் இழுந்து துடிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வில் தற்போது மீள முடியாத சோகம் அரங்கேறியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஐயனார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பதினோரு வயதில் ஜீவா என்ற மகன் உள்ளான். வேலை செய்து கொண்டிருந்த போது பாலத்தின் மீது இருந்து கீழே விழுந்ததால் பலத்த காயங்கள் ஏற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்த அய்யனாரை பார்த்துக் கொள்வதற்காக அவரது மனைவியும் தாயாரும் உடன் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களது மகன் ஜீவா, தன்னுடைய சித்தப்பா ஏழுமலையின் வீட்டில் இருந்து வந்திருக்கிறார். 

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை சற்றுத் தேறி உள்ளதாக கூறியுள்ளனர். ஆகையால் அவரை மருத்துவமனையில் இருந்து தங்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறியிருக்கிறார். ஆனால் மருந்து மாத்திரைகள் மற்றும் உணவு ஆகியவற்றை நேரத்திற்கு சரியாக அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அய்யனாரை காரில் வைத்து அவரது தாயார் மற்றும் மனைவி ஆகிய இருவரும் தங்களுடைய சொந்த ஊரான விழுப்புரத்தில் இருக்கும் கண்டாச்சிபுரத்திற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த அரை மணி நேரத்திலேயே அய்யனாரின் மனைவிக்கும் அவரது தாயாருக்கும் போன் வந்துள்ளது.

அந்த போனை எடுத்து பேசிய அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அய்யனாரின் மனைவி மற்றும் தாயார் இருவருக்கும் மருத்துவமனையில் இருந்த பொழுது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாகவே, அய்யனாரை மருத்துவர்கள் மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் வீட்டிற்கு வந்த அரை மணி நேரத்திலேயே போன் மூலம் அய்யனாரின் தாயார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளதாகவும் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சேர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அய்யனாருக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் உணவு வழங்கும் விதிமுறைகளையும் கற்றுத்தர போலீசாரிடம் அனுமதி கேட்டும் அவர்கள் தர மறுத்துள்ளனர். செய்வதறியாது இருவரும் ஆம்புலன்சில் ஏறி சென்றுள்ளனர். ஒன்றும் புரியாமல் திகைத்து இருந்த 11 வயது மகன் ஜீவா தந்தைக்கு எவ்வாறு உணவு மற்றும் மாத்திரைகள் தரவேண்டும் என்று குழம்பி இருந்திருக்கிறான். இதனையடுத்து சரியான நேரத்தில் மாத்திரைகள் தர இயலாத காரணத்தினால் அய்யனார் பரிதாபமாக வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்திருக்கிறார். அவர் உயிரிழந்ததை அடுத்து போலீசார் அவரது உடலுக்கு அருகில் யாரும் போகக்கூடாது என்று கூறியுள்ளனர்.

உயிர் பிரிந்து பதினாறு மணி நேரமான பின்பும் உடலுக்கு அருகில் யாரையும் செல்லவிடாமல் உடலையும் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தாமல் போலீசார் அங்கிருந்த மக்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைப் பார்த்து கொதித்தெழுந்த அய்யனாரின் தம்பி ஏழுமலை , ஏழைங்க உசுரு எப்படி போனாலும் பரவாலையா சாமி..? என்று அங்கிருந்தவர்களை பார்த்து கேட்டு கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.