தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த திட்டங்கள்

தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல நல்ல திட்டங்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களின் ஆர்வத்தை நிறைவு செய்யவும், தொழில்திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை துவக்குதல், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தோற்றுவித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் விடுதிக் கட்டடம்; விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 7 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் விடுதிக் கட்டடம்; 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆபரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் என்ற புதிய தொழிற்பிரிவிற்கு 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறை கட்டடங்கள்; திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டூல் & டை மேக்கர் என்ற புதிய தொழிற்பிரிவிற்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறை கட்டடங்கள்; இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மெஷினிஸ்ட் என்ற புதிய தொழிற்பிரிவிற்கு 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறை கட்டடங்கள்; 

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு 1 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம்; என மொத்தம் 15 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைக்கான கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

தமிழகத்தில் உள்ள 53 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மெக்கானிக் மோட்டார் வாகனம் தொழிற்பிரிவில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு மின்சார வாகனங்களை இயக்குவதற்கும், பழுது நீக்குவதற்கும் பயிற்சியளிக்க ஏதுவாக 5 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 53 மின்சார வாகனங்கள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ மூலமாக தனியார் துறை நிறுவனங்களால் பணிக்கு தெரிவு செய்யப்பட்ட 238 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இணையவழியாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். 

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்து, தங்கள் கல்வித் தகுதி, பணி முன்அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறையைச் சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப் பணியிடங்களை இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்து, தகுதியான நபர்களை தெரிவு செய்து பணி நியமனம் வழங்குவதற்கும் இவ்விணையதளம் வழிவகை செய்கிறது. இச்சேவை வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.