15 வயது மகன் ஹீரோ! 17 வயது மகன் டைரக்டர்! ரூ.95 லட்சத்தில் படம் எடுத்த மீன் வியாபாரி! ஆனால் தியேட்டருக்கு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!

படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் தான் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் தியேட்டரில் ஓடுகிறதா என்று சென்று நேரில் பார்த்தபோது திரைப்படம் தியேட்டரில் ஓடாததால் திரைப்பட உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளித்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜபாளையத்தை சேர்ந்த மீன் வியாபாரி யான ஆதி என்பவருக்கு எப்படியாவது சினிமா தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக நீண்டகாலம் அயராது உழைத்து கிட்டத்தட்ட 95 இலட்சம் ரூபாய் சேமித்து வைத்து தன் மகன்கள் இருவரையும் வைத்து இந்த புதிய படத்தை எடுத்துள்ளார்.

மீன் வியாபாரி ஆதியின் இளைய மகன் அட்சயன். 15 வயதான இவர் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். 17 வயதான ஆதியின் மூத்த மகன் ஆதவன். இவர் இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக தன் மகன்கள் இருவரையும் வைத்து தனது சொந்த தயாரிப்பில் விருது என்ற திரைப்படத்தை மீன் வியாபாரி ஆதி தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தினா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் படம் ரிலீஸ் ஆவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் முடித்த பின்பு இந்த திரைப்படத்தை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் சில தியேட்டர்களுக்கு படத்தினை மீன் வியாபாரி ஆதி விற்றதாகவும் தெரிகிறது. 

 தாங்கள் எடுத்து வெளியிட்ட திரைப்படம் திரையரங்குகளில் ஓடுகிறதா என்பதை சோதனை செய்ய தனது மகன்களுடன் ஒவ்வொரு தியேட்டருக்கும் மீன் வியாபாரி ஆதி சென்று சோதித்துப் பார்த்து உள்ளார். அப்படி செல்லும்போது சென்னை அயனாவரத்தில் உள்ள கோபிகிருஷ்ணா திரையரங்கில் இவரது திரைப்படம் ஓடவில்லை. இதனை அடுத்து திரையரங்குகளில் ஏன் நான் நடித்த திரைப்படம் ஓடவில்லை என்று கேட்டதற்கு, ப திரையரங்குகளில் வேலை செய்பவர்கள் இவர் தயாரிப்பாளர் என்று நம்பாமல் அவரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த தயாரிப்பாளர் ஆதி அயனாவரம் போலீசில் புகார் அளித்துள்ளார். விவரமறிந்த திரையரங்க உரிமையாளர் தயாரிப்பாளர் ஆதியிடம் சமாதானம் பேசி உள்ளனர். பின்னர் தயாரிப்பாளர் ஆதி தனது திரைப்படத்தை பார்க்க ஒருவர் வந்தாலும் கூட என்னுடைய திரைப்படத்தை நீங்கள் தியேட்டரில் ஓட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார். திரையரங்க உரிமையாளர்களும் ஆதியின் கோரிக்கையை ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.