சென்னையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி..! நிவாரண் 90 ஓனர் வீட்டில் மேனேஜர் மர்ம மரணம்! டோசேஜ் அதிகமானதால் விபரீதம்!

கொரோணை தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சியில் தனியார் நிறுவன மேலாளர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்த சளி மருந்துகளில் ஒன்று "நிவாரண் 90". இந்த மருந்தை "சுஜாதா பயோடெக்" என்ற நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலை உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் சென்னை கோடம்பாக்கத்திலுள்ளது. 

இந்த நிறுவனத்தின் உரிமையாளரின் பெயர் டாக்டர் ராஜ்குமார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளராக சிவனேசன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 27 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்திலிருந்து "நிவாரண்-90, வெல்வெட் ஷாம்பூ, மெமரி வீட்டா" ஆகிய பலதுறை பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றை காசிப்பூரிலுள்ள தொழிற்சாலையில் தயாரிப்பர். மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தான் சிவனேசன் பணியாற்றுவார். இந்நிலையில் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த இவர் ஊரடங்கு சிக்கிக்கொண்டார். இந்நிலையில் ராஜ்குமார் சிவநேசனை தொடர்புகொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார்.

இந்த தயாரிப்பு முயற்சிகள் அனைத்தும் ராஜ்குமாரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளன. ஏற்கனவே சளி, இருமல் ஆகியவற்றுக்கு மருந்து உருவாக்கியபோது உபயோகப்படுத்திய கரைசலுடன் மேலும் சில வேதியல் கரைசலை உபயோகித்து சோதித்துப்பார்க்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி சோடியம் நைட்ரேட் என்ற கரைசலை ஏற்கனவே உபயோகித்து வந்த கரைசலுடன் சேர்த்து மருந்தாக உருவாக்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்தவித மருந்தையும் முதலில் சிவனேசன் உட்கொள்வது வழக்கமாகும். அதன்படி இந்த மருந்தையும் சிவனேசன் உட்கொண்டு பின்னர் ராஜ்குமாருக்கும் கொடுத்துள்ளார். சோடியம் நைட்ரேட் கலந்த கரைசலை குடித்த சில நிமிடங்களிலேயே இருவரும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிவநேசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், ராஜ்குமாரை மீட்டெடுத்த மருத்துவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதிகளவில் சோடியம் நைட்ரேட் கலக்கப்பட்டு இருந்த காரணத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் சிவனேசன் உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியான பிறகு இறப்பின் உண்மையான காரணம் குறித்து தெரியவரும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.