சென்னையில் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் வேல்முருகன் கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு பலி!

ராஜ் தொலைக்காட்சியின் செய்தியாளர் வேல்முருகன் கொரோனா தொற்றுக்குப் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என்று திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.


ஊடகத்தளத்தில் ஒவ்வொருவரும் உயிரைப் பணயம் வைத்தே ஒங்வொரு நாளும் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு ஓடியாடி செய்திகளைத் திரட்டிய, ஊடகப்பணிகளை ஆற்றிய வேல்முருகன் இந்தக் கொடியத் தொற்றுக்கு ஆளாகிப் பலியாக நேர்ந்தது பெருந்துயரத்தை அளிக்கிறது. ஊடத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் இவரது சாவு அச்சத்தையளிக்கக் கூடியதாக அமைந்துவிட்டது. ஊடகவியலாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாகப் பணியாற்றவேண்டும்.

வேல்முருகன் அவர்களின் மனைவியும் ஒரு செவிலியராக மக்களைக் காக்கும் பணியில் நாள்தோறும் ஈடுபட்டுவருகிறார். அவரும் பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டும்.தற்காலிகப் பணியிலிருக்கும் அவரை நிரந்தர பணியாளராக நியமிக்க வேண்டுமென இந்த இக்கட்டானச் சூழலில் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சயின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு மக்கள்பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்தம் குடும்பத்தினருக்கு ரூ50 இலட்சம் இழப்பீடு வழங்கப்படுமென முதல்வர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியளித்துள்ளார். அதன்படி, களப்பணியின்போது கொரோனாவால் உயிரிழக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வழங்கிட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், அரசின் சார்பில் அவரது உடலை அரசுமரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.