அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் ஓடோடி வருகிறார் மோடி! எப்போ தெரியுமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தி வரதரை தரிசிக்க பிரதமா் நரேந்திர மோடி வருகின்ற 23ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோளும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

8வது நாளான இன்று அத்தி வரதர் ரோஜா நிற வண்ண பட்டு ஆடை உடுத்தி பல வகை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனா். விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அளவுக்கதிகமாக காணப்படுகிறது. மேலும் நேற்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அத்திவரதரை வழிபட்டார். அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வழிபாடு நடத்தினர்.

இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 23ம் தேதி காஞ்சிபுரம் வரவுள்ளார். 23ம் தேதி சயனக் கோலத்தில் இருக்கும் அத்திவரதரை தரிசித்து, மறுநாள் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை தரிசிக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோடியுடன் இணைந்து முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மோடி காஞ்சிபுரம் வருகையையொட்டி பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சீபுரம் கோவிலுக்கு செல்கிறார். இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு செய்யப்படுகின்றன.