பேரம்பேசும் பிரேமலதா! வரம்புமீறும் குட்டி கேப்டன்! - டென்ஷனில் ஸ்டாலின்! கடுப்பில் எடப்பாடி!

எப்போதுமே கடைசி நேரத்தில் கூட்டணி அறிவிப்பு வெளியிடுவது பிரேமலதா பாணி. அதாவது மிகவும் நன்றாக யோசித்து தெளிவாக முடிவு செய்வதாகச் சொல்லி, தப்பான முடிவு அறிவிப்பார்.


அதன் பலனைத்தான் கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலின்போது மிகவும் நன்றாக அந்தக் கட்சி அனுபவித்தது. அதே பஞ்சாயத்துத்தான் இப்போதும் நடந்துவருகிறது. 

தங்கள் கட்சியின் துணை இல்லாமல் இரண்டு பெரிய கட்சியும் தேர்தலை சந்திக்க முடியாது என்ற தொணியில் எந்த முடிவையும் அறிவிக்காமல் பேரம் பேசிக்கொண்டே இருக்கிறார் பிரேமலதா. அவருக்கு சப்போர்ட் செய்வது போன்று அவரது மகன் விஜயபிரபாகரனும் தன் பங்குக்கு, தமிழக அரசியலே தங்களைச் சுற்றித்தான் நடக்கிறது என்ற ரீதியில் கனவில் மிதந்து வருகிறார்.

அந்த டீமில் ஓரளவு டீசண்டாக பேசக்கூடிய சுதீஷை கூட்டணியுடன் பேசுவதற்கு பிரேமலதா அனுமதிக்கவில்லையாம். சுதீஷ்தான் தி.மு.க.வுடன் தொடர்பில் இருந்தார். தி.மு.க. ஆரம்பம் முதல் இரண்டு தொகுதியில் உறுதியாக இருந்தனர். அதன்பிறகு திருநாவுக்கரசர் வந்து பேசி, காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 சீட் வாங்கித் தருகிறேன் என்று பேசினார்.

ஆனால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தமிழகத்திற்கான 9 தொகுதிகளில் இருந்து தே.மு.தி..க.வுக்கு ஒதுக்கமுடியாது என்று ராகுல் உறுதியாக சொல்லிவிட்டாராம். அதனால் தி.மு.க. பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறிக்குப் போனது. வேறு வழியில்லாமல் 3 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் என்று பேரம் பேசப்பட்டது. கொஞ்சமும் தயங்காமல் 4 சீட் + 1 ராஜ்யசபா சீட் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரேமலதா.

அதேநேரம் அ.தி.மு.க.வுடன் பேசுவதையும் பிரேமலதா நிறுத்தவில்லை என்பதுதான் வேடிக்கை. 

ஆரம்பத்தில் 3 இடங்கள் என்றுதான் பியூஸ் கோயல் ஆரம்பித்தார். உடனே பிரேமலதா கொந்தளித்தார். பா.ம.க. போலவே எங்களுக்கும் வேண்டும் என்று கேட்டதும், அவர்களுடைய வாக்கு வங்கியும் உங்களது வாக்கு வங்கியும் வேறுபடுகிறது என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால் எப்படியும் கூட்டணியை முடிவு செய்ய வேண்டும் என்பதால் 1 ராஜ்யசபா சீட்டுக்கு இறங்கிவந்தார். ஆனாலும் பிரேமலதாவின் பிடிவாதம் முடிவுக்கு வரவில்லை.

தி.மு.க. பேசத் தொடங்கியதும் அ.தி.மு.க. யோசித்தது.உடனே கூடுதலாக ஒரு சீட் தருகிறேன் என்று சொன்னதுடன் நில்லாமல் எதிர்பார்க்காத தொகையும் தேர்தலுக்காக தருகிறேன் என்று சொன்னது. 4 + 1 + பணம் என்று சொல்லப்பட்ட பிறகும் பிரேமலதா சமாதானம் ஆகவில்லை. அதனால் அ.தி.மு.க. கண்டுகொள்ளாமல் விட்டது.

கிட்டத்தட்ட தி.மு.க.வுடன் பிரேமலதா சேர்ந்துவிடுவார் என்று தெரியவந்ததும் நேற்று அமைச்சர் ஒருவர் சந்தித்து 5 + 1 + பணம் என்று கடைசி வாய்ப்பு கொடுத்திருக்கிறார். எங்களுடன் சேர்ந்தால் மீதமிருக்கும் 2 ஆண்டுகளில் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை காட்டியிருக்கிறார்.

இந்த விவகாரம் முடியாத காரணத்தால் தங்கள் கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் ஸ்டாலின் டென்ஷனில் இருக்கிறார். அமைதியாக காட்சியளிக்கும் எடப்பாடியும் இந்த விவகாரத்தில் எக்கச்சக்க கடுப்புக்கு ஆளாகிவிட்டாராம். அதனால் இரண்டு பேரும் அம்புட்டுத்தான் என்று கையை உயர்த்திவிட்டார்கள்.

தி.மு.க. பக்கம் போனால் வெற்றி, அ.தி.மு.க. பக்கம் போனால் பணம் - எந்தப் பக்கம் போகலாம் என்று இன்னமும் யோசித்துக்கொண்டே இருக்கிறார் பிரேமலதா. ரொம்பவும் யோசிச்சா சிக்கல் என்பதை யாராவது புரிய வைச்சா சரி.