பிரசவ வலி..! 13 மணி நேரம் அழைக்கழித்த மருத்துவமனை..! வலியால் துடியாய் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் நடந்த அந்த சம்பவம்!

மருத்துவமனையில் படுக்கை கிடைக்காத காரணத்தினால் ஆம்புலன்ஸிலேயே சுற்றித்திரிந்த கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் உத்தரிப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் நொய்டா-காசியாபாத் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதன் எல்லை பகுதியில் கோடா என்ற காலணி அமைந்துள்ளது. இங்கு விஜேந்தர் சிங் என்ற 30 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் நீலம். நீலம் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். 

ஊரடங்கு காலத்தில் வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நீலம் ஆலோசனைகளை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக விஜேந்தர் சிங் ஆம்புலன்ஸ் வரவழைத்து தன்னுடைய மனைவியை வழக்கமாக அழைத்து செல்லும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

மருத்துவமனை தரப்பில் படுக்கை வசதி இல்லை என்று கூறி கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதே காரணத்தினால் கணவன் மற்றும் மனைவி கிட்டத்தட்ட 13 மணி நேரமாக அலைந்துள்ளனர். துரதிஷ்டவசமாக பிரசவ வேதனையில் ஆம்புலன்சிலேயே நீலம் உயிரிழந்தார். இந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விஜேந்தர் சிங் அளித்த பேட்டியில், "நொய்டா, வைஷாலி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் ஒவ்வொன்றாக முறையிட்டோம். ஆனால் எந்த மருத்துவமனையிலும் படுக்கை வசதியில்லை என்று கூறி என் மனைவியை அனுமதிக்க மறுத்துவிட்டனர். நாங்கள் அலைந்த மருத்துவமனைகளில், 8 மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் ஆகும். எப்படி அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி இல்லாமல் இருக்கும். இறுதியாக நொய்டாவில் உள்ள அரசு மருத்துவமனையின் வாயிலில் சென்றபோதுதான் என்னுடைய மனைவி உயிரிழந்தார்" என்று கதறி அழுது கூறினார்.

இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் மிகப் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.