ஊரடங்கில் வலியால் துடித்த கர்ப்பிணி! உதவிக்கு யாரும் இல்லை! லாரி மறைவில் பிள்ளை பெற்ற இளம் பெண்!

சென்னை: கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தில் வேறு வழியின்றி லாரி மறைவில் பிரசவம் பார்க்க வேண்டிய வேதனைக்கு இளம்பெண் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் அன்றாட வாழ்வு முடங்கியதோடு, போக்குவரத்தும் முடக்கப்பட்டு, அனைவரும் வீடுகளிலேயே தங்கும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, போக்குவரத்து வசதி இல்லாததால், அன்றாட கூலி வேலை செய்யும் மக்கள், இந்தியா முழுக்க வேலைக்குச் சென்ற இடங்களிலேயே, அப்படியே தங்க வேண்டியுள்ளது.

பலர் சொந்த ஊரை விட்டு பிழைப்பு தேடி சென்ற இடத்திலேயே சாலையோரம், லாரி நிறுத்துமிடங்கள், போக்குவரத்து நிலையங்களில் வசிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆந்திராவில் உள்ள இந்துப்பூர் பகுதியை சேர்ந்த சிலர் குடும்பத்துடன் தமிழகத்திற்கு பிழைப்பு தேடி வந்துள்ளனர். இவர்களின் வேலை,பிளாஸ்டிக் கழிவுகள், பழைய இரும்புகள், அட்டைப் பெட்டிகளை சேகரித்து பழைய சாமான் வாங்கும் கடைகளுக்கு விநியோகிப்பதாகும்.

இதன்படி, தமிழகம் முழுவதும் நாடோடிகளாய் சுற்றி திரிந்து இந்த வேலையை செய்து வந்தவர்கள், சில வாரம் முன்பாக, புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் பகுதிக்கு வந்துள்ளனர். அங்குள்ள இரும்புச் சாமான் வாங்கும் கடையில் வாடகைக்கு தள்ளுவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு சுற்றுப்புறத்தில் இருந்து பழைய பொருட்களை சேகரித்து, விற்று பிழைப்பு நடத்த தொடங்கியுள்ளனர். திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் உள்ள கட்டியாவல் பகுதியில் உள்ள மரத்தடி ஒன்றில்தான் இவர்கள் குடும்பமாக வசிக்கிறார்கள்.

இந்நிலையில், திடீரென கொரோனா வைரஸ் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், இவர்களின் பிழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு 10 நாள் முன்பாக பிரசவம் நிகழ்ந்தது. மருத்துவமனைக்குச் செல்ல முடியாத சூழலில், சாலையோரம் நின்ற லாரி ஒன்றின் மறைவில் பிரசவம் பார்த்துள்ளனர்.

அதன்பிறகும், எந்த மருந்து, மாத்திரை, தடுப்பூசி எதுவும் போடாமல், அப்படியே மரத்தடியில் சுற்றி புதர்கள் இருக்க, பிளக்ஸ் பேனரை விரித்து அதன் மேலேயே பிறந்த குழந்தையையும், தாயையும் படுக்க வைத்துள்ளனர். எப்படியாவது ரயில் மூலமாக ஆந்திரா செல்லலாம் என்ற நினைப்பில் இருந்தவர்களுக்கு, ரயில் சேவை நிறுத்தப்பட்ட விசயம் பேரிடியாக மாறிவிட்டது.

மொத்தம் 15 பேர் தற்போது அந்த மரத்தடியில் பிழைப்பின்றி அல்லாடுகின்றனர். இவர்களின் பரிதாப நிலையை பார்த்து புதுக்கோட்டையை சேர்ந்த துணைவன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பினர், தேவையான உணவு கொடுத்து உதவியுள்ளனர். இருந்தாலும், எல்லா நாளும் உதவ முடியாது என்பதால், இதுபற்றி புதுக்கோட்டை நகராட்சி உதவி செய்யும்படி துணைவன் அமைப்பினர் முறையிட்டுள்ளனர். நகராட்சி அதிகாரிகளும் இதுபற்றி பரிசீலித்து வருகின்றனர்.