இந்தக் கோயிலில் ஒரே ஒரு அகல் விளக்கு ஏற்றினால் போதும்! நினைத்தது நடக்கும்! எங்க இருக்கு தெரியுமா?

திருப்பத்தூர் சிவகங்கை பாதையில் திருப்பத்தூரிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கோஷ்டியூர்.

இங்குள்ள ஆலயம் சௌமிய நாராயணர் கோயில். இந்த ஆலயத்தின் விமானம் அஷ்டாங்க விமானமாகும். பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. கருவறைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மூன்று கருவறைகளைக் கொண்ட விமானத்தை அமைப்பது அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்த விமானம் மூன்று தளங்களாக உள்ளது. விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது விசேஷமாகும். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

இத்தல இறைவனான சவுமியநாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார்.

இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன் என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். இத்தல இறைவனை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து வழிபட்டுள்ளனர்.

இந்த ஆலயத்தில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.