ஸ்டாலினை வீழ்த்த நாயுடுவை வீழ்த்தியவர்! பிரசாந்த் கிஷோர் மூலம் எடப்பாடி போடும் கணக்கு!

இந்திய அரசியலின் மிகச்சிறந்த வியூக வகுப்பாளராக கருதப்படும் பிரசாந்த் கிஷோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.


குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது அவரது அரசியல் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். பிறகு இந்தியன் பொலிடிகல் ஆக்சன் கமிட்டி எனும் நிறுவனத்தை தொடங்கி மோடியை பிரதமராக்கும் வியூகத்தை வகுத்தவர் பிரசாந்த் கிஷோர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு  மோடியிடம் இருந்து விலகிய பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருடன் இணைந்தார். இதன் பிறகு பிரசாந்த் கிஷோர் வகுத்த வியூகம் மூலமாகவே லாலுவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து பீகாரில் ஆட்சியை பிடித்தார் நிதிஷ் குமார்.

தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் வியூகம் வகுத்துக் கொடுக்கும் வேலையை பிரசாந்த் கிஷோர் செய்து கொடுத்தார். இதன் மூலமாக மாபெரும் வெற்றி பெற்று ஜெகன் ஆந்திராவின் முதலமைச்சர் ஆனார். இந்த அளவிற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றிக் கொடி நாட்டும் பிரசாந்த் கிஷோரை கடந்த வாரம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சந்தித்து பேசினார்.

அதன் தொடர்ச்சியாக டெல்லி சென்று எடப்பாடி பழனிசாமி அங்கு பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு இயக்குனர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கான வியூகத்தை வகுத்துக் கொடுக்க எடப்பாடி பழனிசாமி கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர்களுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் விரைல் சென்னை வந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.